கோயில் நிலங்களின் குத்தகை தொகை நிர்ணயம்: குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களுக்கான குத்தகை தொகையை தற்போதைய சந்தைவிலையின் அடிப்படையில் நிர்ணயிக்க குழு அமைக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி தாலுக்கா வாசுதேவநல்லூரில் உள்ள சங்கரநாராயணர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் 17 ஏக்கர் 62 செண்ட் நிலத்தை தனி நபருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த நிலத்தை திருமலை உள்ளிட்ட 14 பேருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், அதற்காக மிகக் குறைந்த தொகையே வாடகையாக பெறப்படுவதாகவும், அவர்களிடமிருந்து மீட்டு பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விடக்கோரி முத்துசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், இன்று பிறப்பித்த உத்தரவில், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்றும், இந்த கோவில்களின் சொத்துக்களின் காவலனாக இருக்க வேண்டிய இந்துசமய அறநிலையத்துறை தனது பொறுப்பை தட்டிக்கழிக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் 2014ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற உத்தவின் அடிப்படையில் அனைத்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க குழு அமைக்க அறநிலையத்துறை இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை பொறுத்தவரை கோவில் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தி 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதே போல, தமிழக கோயில்களின் சொத்துக்கள் தற்போது யார் யார் வசம் உள்ளன என்பது குறித்து விபரங்களை பத்திரிக்கை, கோவில் விளம்பர பலகைகள், இணையதளத்தில் வெளியிட வேண்டும். கோயில் நிலங்களை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து 4 வாரத்துக்குள் நிலுவையில் உள்ள வாடகைப் தொகையை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறுபவர்கள் மீது நிலத்தை மீட்பது தொடர்பான சட்டபடியான நடவடிக்கை எடுக்க அறநிலைய துறை, தமிழக அரசு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக கோவில் சொத்துக்களுக்கு தற்போதைய சந்தைவிலையின் அடிப்படையில் வாடகையை நிர்ணயிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டுமென இந்துசமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, நிர்ணயிக்கபடும் வாடகையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நிலத்தை தொடர்ந்து குத்தகை வழங்கலாம் என அனுமதித்துள்ளார். அந்த புதிய வாடகையை ஏற்க மறுப்பவர்களிடமிருந்து நிலத்தை மீட்டு பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடவேண்டும் என உத்தரவிட்டார்.

கோவில் நிலங்களை 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு வழங்கியது தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இந்துசமய அறநிலையத்துறை அணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து குழு அமைத்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே உள்ள வாடகை பாக்கை வசூலிக்க உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவேண்டுமெனவும், வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது அறநிலையத்துறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

கோவில் நிலம் மூலம் வரும் வருமானத்தை கோவில் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டுமெனவும் உத்தவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

இதேபோல, சிவகங்கை மாவட்டம் சூரக்குடி தேசிகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை முத்து செட்டியார் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி, நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவிலின் பாரம்பரிய அறங்காவலர் லக்‌ஷ்மணனின் பொது அதிகாரம் பெற்ற அண்ணாமலை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன், சூரக்குடி கோவிலின் நிலம் விற்கபட்டுள்ளதா என விசாரிக்கவும், அப்படி விற்றிருந்தால் நிலத்தை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு. நிலம் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close