உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜசோழன். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாக நிற்கிறது பெரியகோயில் என்றால் மிகையில்லை. ராஜராஜ சோழனின் பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஐப்பசி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு சதயவிழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இரண்டு நாட்கள் அரசு விழாவாக ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி கடந்த 24-25-ம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முக்கியமாக ராஜராஜ சோழனின் 1038-ம் ஆண்டு சதயவிழாவினை நினைவு கூறும் வகையில் 24-ம் தேதி இரவு 1038 பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்று சேர்ந்து பிரமாண்ட நாட்டிய நிகழ்ச்சினை நடத்தினர்.
இதையடுத்து ராஜ ராஜ சோழன் சதய விழாவான கடந்த 25-ம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் திருஉருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மொத்தம் 107 அமைப்புகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மாலை அணிவித்தனர்.
அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களோ, 2-ம் கட்ட தலைவர்களோ ராஜ ராஜ சோழன் சதய விழாவுக்கு வரவில்லை என்றாலும் அனைத்துக்கட்சி சார்பிலும் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளரான புஸ்ஸி.ஆனந்த் ராஜராஜ சோழன் சதயவிழாவில் பங்கேற்க தஞ்சாவூர் வந்தார். அவர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொண்டவர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்காமலேயே திரும்பி சென்றது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சிலரிடம் பேசினோம், விஜய் அரசியலுக்கு வருவார் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் விஜய் அடிக்கடி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வருகின்றனர். சதய விழாவை முன்னிட்டு புஸ்ஸி.ஆனந்த் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்க இருப்பதாக தஞ்சாவூர் நகரம் முழுவதும் நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டினர். முதன் முறையாக ராஜராஜ சோழன் சதய விழாவில் கலந்துக்கொண்டு அதிகாரப்பூர்வமாக மாலை அணிவிக்க இருந்ததும், அதற்கான நேரமும் காவல்துறை சார்பில் ஒதுக்கப்பட்டிருந்ததும் பேசு பொருளானது.
இதனை தொடர்ந்து 25-ம் தேதி காலை தஞ்சாவூர் வந்த புஸ்ஸி.ஆனந்திற்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் திருமணம், விஜய் பயிலகம், விலையில்லா விருந்தகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். லியோ படம் ஓடும் தியேட்டருக்கு சென்று வசூல் விபரம் குறித்து ஆய்வு செய்தார். இதற்கிடையில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்தால் அரசியலில் ஜொலிக்க முடியாது. ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட மாலை அணிவிக்க தயக்கம் காட்டியிருக்கின்றனர்.
அவர்கள் மாலை அணிவித்தால் அவர்களின் பதவி பறிபோகும் என்கிற ஒரு சென்டிமெண்ட் இருப்பதாக புஸ்லி.ஆனந்தின் காதில் சிலர் ஓத, சதயவிழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதற்கான அடையாளமாக பேனர் முன் அமைக்கப்பட்டிருந்த அன்னதானத்தை துவக்கி வைத்து விட்டு ராஜராஜ சோழன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்காமல் காரில் ஏறி சட்டென அங்கிருந்து பறந்து சென்றார். புஸ்ஸி.ஆனந்த் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவிக்காமல் திரும்பி சென்றது தஞ்சை டெல்டா பகுதி விஜய் மக்கள் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத், சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம், பரம்பரைஅறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, துணைமேயர் மரு.அஞ்சுகம் பூபதி, துணைத் தலைவர் சந்திரசேகரமேத்தா, தருமபுரஆதீனம் குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாநகர நலஅலுவலர் மரு.சுபாஷ் காந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மறைந்த தலைவர்கள் கலைஞர் கருணாநிதி, இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என பலரும் ராஜராஜ சோழன் சிலை சென்டிமெண்டில் சிக்கி பதவிகளை இழந்ததும், 1997-ல் கலைஞர் ஆட்சியில் கும்பாபிஷேகத்தின்போது தீ பிடித்து 48 பேர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.