scorecardresearch

ஆளுநருக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்; தஞ்சையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி, அவரை கண்டித்து கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

CPM CPI Protest
கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழக அரங்கில் பட்டம் பெற வந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர், தமிழக ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்ட முயன்றதால், போலீசார் அவரை வெளியேற்றினர்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் 13-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் கலந்துகொள்ள தஞ்சாவூர் வருகை தரும் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்துவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி, தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி, அவரை கண்டித்து கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் அரவிந்த்சாமி தமிழ்ப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எம்.பில் பட்டம் பெறுவதற்காக விழா அரங்கத்தில் அமர்ந்திருந்தார்.

இந்திய மாணவர் சங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தது என்ற நிலையிலும் அரவிந்த்சாமி ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி அல்லது கோஷம் எழுப்புவார் என்று உளவுத்துறை எச்சரித்த நிலையில், அவரை போலீசார் பட்டமளிப்பு விழா அரங்கில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். முன்னதாக, அவர் கறுப்பு உடை அணிந்து அணிந்து வந்த நிலையில், அவர் கறுப்புக்கொடி உள்ளிட்ட வேறு ஏதேனும் பொருட்கள் வைத்திருக்கிறாரா என்ற சுமார் ஒரு மணி நேரம் போலீசார் அவரை தனி அறையில் வைத்து சோதனை நடத்தினர்.

இதனிடையே திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஆளுநரை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதேபோல், தஞ்சையிலும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர், பல்கலைக்கழக அதிகாரிகள் ஆளுநரை வரவேற்றனர்.

இந்நிலையில், திருச்சி-தஞ்சை மாநகராட்சி மேயர்கள் ஆளுநர் வரவேற்பை தவிர்த்தனர் என்பதும், திருச்சி-தஞ்சை சாலையில் ஆளுநர் சென்றதால் போலீஸார் பாதுகாப்புக்காக பலப்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu thanjavur communist parties black flog protest against tn governor

Best of Express