scorecardresearch

அரசு நிலம் ஆக்கிரமிப்பு…. பல்கலைகழகத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், இதற்காக வித்தியாசத் தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்தது.

அரசு நிலம் ஆக்கிரமிப்பு…. பல்கலைகழகத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

தஞ்சையை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்டு அதை குடிமனை இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பட்டாவுடன் குடிமனை வழங்கக்கோரி தஞ்சாவூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க சிறைத்துறைக்கு தமிழக அரசு ஒதுக்கியிருந்த 31.37 ஏக்கர் பரப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் கடந்த 35 ஆண்டுகளாக இப்பல்கலைகழகம் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து அதில் கட்டடங்கள் கட்டியுள்ளது.

இந்நிலையில் கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், இதற்காக வித்தியாசத் தொகையை செலுத்த தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர் வட்டாட்சியர் மூலம் பிப்.23-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தீர்ப்பளித்தது. ஆனாலும் இந்த தீர்ப்பை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்டு அதை குடிமனை இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பட்டாவுடன் குடிமனை வழங்கக்கோரி தஞ்சாவூரில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு தலைமையில் தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக
ரயில் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

இதனிடையே ஆக்கிரமிப்பை அகற்றி மேற்படி நிலத்தை மீட்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக  சாஸ்த்ரா பல்கலைக்கழகம்  மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu thanjavur farmers protest against thanjai sastra university

Best of Express