தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன. இந்தத் தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகளுடன் போட்டி போட்டு அசூர வேகத்துடனும், பேருந்து முழுவதும் நிறைந்த பயணிகளையும் அடைத்துக்கொண்டு செல்வதால் ஆங்காங்கே விபத்துகளும் நடப்பதுண்டு. அதேபோல் பயணிகளை ஏற்றிச்செல்வது தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே மோதல் அரங்கேறுவது சாதாரணமா நிகழ்வாக நடந்து வருகிறது.
அந்தவகையில், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து டி.வி.எம். என்ற தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து சுமார் ஐந்து நிமிட இடைவெளியில் தஞ்சைக்கு புறப்பட்டுள்ளது. வரும் வழியில் பயணிகளை ஏற்றுவதில் 2 பேருந்துகளுக்கும் இடையே போட்டோ போட்டி நடந்துள்ளது. இதனால் இரு பேருந்துகளும் ஒருவரையொருவர் முந்திச் செல்ல முயன்றதால் இரு பேருந்திலும் இருந்த பயணிகள் உயிர் பயத்தில் பயணித்து வந்துள்ளனர்.
இந்த இரு பேருந்துகளும் தஞ்சாவூரில் தொம்பன்குடிசை பேருந்து நிறுத்தம் வந்தபோது, முன்னால் சென்ற தனியார் பேருந்து, பின்னால் வந்த அரசு பேருந்துக்கு வழிவிடாமல் பேருந்தை நிறுத்தியுள்ளனர். இதனால் பயணிகள் இறங்கிய பிறகும், அரசு பேருந்தை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனியார் பேருந்து ஓட்டுநர் கணபதி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29), நடத்துநர் திருவாரூர் கொரடாச்சேரியை சேர்ந்த சசிகுமார் (39), இருவரிடமும், வழிவிடுமாறு அரசுப் பேருந்து நடத்துனர் மாரியப்பன் (47) கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஊழியர்கள் இருவரும், அரசுப் பேருந்து நடத்துனரை இழுத்து நடுரோட்டில் போட்டு அடித்தனர். இதில் மூவரும் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். பொதுமக்கள் மூவரையும் விலக்கி விட்டனர். அரசுப் பேருந்து நடத்துனர் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில், தனியார் பேருந்து ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தை தனியார் பேருந்தில் பயணித்த ஒருவர் காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டது வைரல் ஆகி வருகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“