Tamilnadu News Update : தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஹாஸ்டலில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஹாஸ்டர் வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகள் லாவண்யா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இவரின் அம்மா கனிமொழி இறந்துவிட்ட நிலையில், லாவண்யா மைகேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 படித்து வருகிறார். 8ம் வகுப்பில் இருந்து இதே பள்ளியில் படித்து வரும் இவர், பள்ளியின் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்
இந்நிலையில், கடந்த 9-ந் தேதி மாணவி லாவண்யா திடீரென வாந்தி எடுத்துள்ளார். அப்போது தோழிகள் விசாரித்த நிலையில், தனக்கு வயிற்று வலி என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மறுநாள் அவரின் தந்தை முருகானந்தத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மைக்கேல் பட்டிக்கு வந்த முருகானந்தம், தனது மகளை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற லாவண்யாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 15-ந் தேதி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமகையில் சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது ஹாஸ்டலில் வார்டன் அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால் மன உளைச்சல் ஏற்பட்டு விஷம் குடித்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் திருக்காட்டுப்பள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தை தொடர்ந்து, போலீசார் லாவண்யாவிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஹாஸ்டலின் வார்டன் சகாயமேரியை போலீசார் கைது செய்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி லாவண்யா நேற்று மரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாணவி மதமாற்றம் குறித்து அழுத்தம் கொடுத்ததால், தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மத மாற்று தடை சட்டம் கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும், மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு விசாரணை நடுநிலையாக இருக்க வேண்டும் என்றும், கூறியுள்ளார். இதனிடையே பாஜக சார்பில் மாணவிக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil