கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதில் புதுச்சேரியுடன் சேர்ந்து 40 தொகுதிகள் உள்ள தமிழகத்தில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் 39 இடங்களில் தி.மு.க.வும் 1 இடத்தில் அ.தி.மு.க.வும் வெற்றி வாகைசூடியது.
இதில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் மகன், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தேனி மக்களை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனிடையே ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றிக்கு எதிராக வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த சில வருடங்களாக இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
இதனிடையே இந்த வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய வசதியாக தீர்ப்பு உத்தரவு 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களை தேர்தலில் அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற ஒரே எம்.பி ரவீந்திரநாத் குமார்.
ஆனால் தற்போது அதிமுகவில் இருந்து ஒ.பி.எஸ் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பி.ரவீந்திரநாத் குமாரை அதிமுக எம்பியாக அங்கீகரிக்க கூடாது என்று அதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனிடையே ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது ஒபிஎஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, எதை செய்தும் வெற்றி பெற்றுவிடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் முடிவில் தீர்ப்பு இப்படித்தான் வரும். அதை தாங்கிக்கொள்ளும் சக்தி அவர்களுக்கு வேண்டும். உண்மை தோற்பதில்லை என்பதற்கு ஐகோர்ட் தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு என்று தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“