கனமழை பெய்து வருவதால் திருச்செந்தூர் கடற்கரைக்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று கூறியுள்ள மாவட்ட நிர்வாகம், பௌர்னமி தினத்தில் கடற்கரையில் தங்கி தரிசனம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள செந்தில் ஆண்டவர் திருக்கோவில் உலக பிரசிதி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் 2-ம் வீடான திருச்செந்தூரில், நாள்தோறும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக பௌர்னமி போன்ற முக்கிய நாட்களில், பக்தர்கள் கடற்கரையில் இரவு தங்கி, அடுத்த நாள் அதிகாலையில், குளித்துவிட்டு முருகனை தரிசிப்பது வழக்கம்.
இதன் காரணமாக பௌர்னமி போன்ற முக்கிய நாட்களில், திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் கடந்த சில சில தினங்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ள நிலையில், ஏற்கனவே பல இடங்களில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்தடுத்த நாட்களில் மேலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், பௌர்னமி தினத்தில் பக்தர்கள் கடற்கரையில் தங்க வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர் மழை காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“