/indian-express-tamil/media/media_files/2025/06/29/death-person-2025-06-29-09-47-37.jpg)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியின் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில் நகை திருட்டு சம்பவம் தொடர்பாக காவலர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 27 வயது இளைஞர் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மடப்புரம் பகுதியின் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில் பாதுகாப்பாளராக இருந்தவர் அஜித்குமார். இவர், மடப்புரத்தைச் சேர்ந்த பாலகுருவின் மகன். தனியார் பாதுகாப்பு நிறுவனம் வாயிலாக பத்ரகாளியம்மன் கோயிலில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 75 வயதான சிவகாமி, தனது மகள் நிகிதாவுடன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
நடக்க முடியாத சிவகாமிக்கு சக்கர நாற்காலி தேவைப்பட்ட நிலையில், அஜித்குமார் அதை வழங்கினார். பின்னர், நிகிதாவின் கோரிக்கையை ஏற்ப காரை ‘பார்க்’ செய்துள்ளார். வழிபாடு முடிந்ததும், காரில் இருந்த பைகளை பார்த்த நிகிதா, பையில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போனதாகக் கூறி திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, அஜித்குமாரை போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதே நாளில் தனிப்படை போலீஸார் மீண்டும் அவரிடம் விசாரணை நடத்தியதாகவும், அதன் போது அவர் உடல்நலக்குறைவால் தவித்ததாகவும் கூறப்படுகிறது. அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் மற்றும் திருப்புவனம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் காவல்நிலையத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை ஒட்டி கோயிலிலும், காவல்துறையிலும் அதிர்ச்சி நிலவுகிறது.
விசாரனைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக,காவல்நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் கண்ணன், பிரபு, சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி ஆஷித் ரவத் உத்தரவிட்டதுடன் வெளிப்படையான விசாரனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.