Advertisment

'ஆபரேசன் அகழி' 2-ம் கட்ட ரெய்டு; திருச்சியில் 16 பேர் வீடுகளில் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் குற்றவாளிகளுக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்திய காவல்துறை அதிகாரிகள், பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tiruchirapa Varunkumar

திருச்சி எஸ்.பியாக வருண்குமார் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, கந்துவட்டி, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு எல்லாம் சிம்ம சொப்பமாக இருந்து வருகிறார்.

Advertisment

அந்தவகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி மாநகர ஆணையர், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

அதன்படி "ஆபரேசன் அகழி" என்ற பெயரில் காவல் ஆய்வாளர்களின் தலைமையில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகப்படும் நபர்களின் முதல் பெயர் பட்டியல் (லிஸ்ட்) தயார் செய்யப்பட்டது. அதிரடியாக கடந்த (19.09.2024)-ஆம் தேதி அவர்களது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் 14 காவல் ஆய்வாளர்கள் தலைமையில், சோதனை நடத்தப்பட்டு, பல்வேறு ஆவணங்கள், கணக்கில் வராத பணம், நகைகள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று "ஆபரேசன் அகழி" 2-வது பெயர் பட்டியல் (லிஸ்ட்) நபர்களான 1) பால்ராஜ். 2) விமல் (எ) செல்வ குமார், 3) ஸ்டீபன் ராஜ், 4) ராமு. 5) நாகேந்திரன் (எ) பாம்புகுட்டி நாகேந்திரன், 6) நவீன் குமார், 7) ராஜா, 8) பெரியசாமி (எ) கருவாடு பெரியசாமி, 9) ரமேஷ், 10) சன்னாசி (எ) செந்தில், 11) ஆனந்த், 12) காத்தான் (எ) காத்தப்பிள்ளை, 13) கங்கா (எ) திலீப்குமார், 14) விசு (எ) விசுவநாதன். 15) முருகானந்தம் மற்றும் 16) மணிமாறன் ஆகியோர்கள் வீடு மற்றும் தொடர்புடைய சோதனை நடத்தப்பட்டது.

"ஆபரேசன் அகழி" 2-வது பட்டியல் சோதனை முடிவில் மேற்படி நபர்களுக்கு தொடர்பில்லாத 290 சொத்து ஆவணங்களும், 45 வங்கி கணக்கு புத்தகங்களும், 60 புரோ நோட்டுகளும், 22 நிரப்பப்படாத காசோலைகளும், 05 செல்போன்களும், 13 சிம்கார்டுகளும், பிற ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. மேற்படி கைப்பற்றப்பட்ட பத்திரங்கள் அனைத்தும் சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து மூலமாகவும், கந்து வட்டி தொழில் மூலமாகவும் மிரட்டி பெறப்பட்டவை என விசாரணையில் தெரிய வருகிறது.

மேலும் ஆபரேஷன் அகழி துவங்கும் போது ஒரு பெயர் பட்டியல் (லிஸ்ட்) தான் இருந்தது. 2-வது பெயர் பட்டியல் (லிஸ்ட்) உள்ள 16 நபர்களை நேற்று இரவு ரெடி செய்து அவர்கள் தொடர்பான வீடு மற்றும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆபரேஷன் அகழி நடவடிக்கையால் கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரவுடிசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நிறைய மனுதாரர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை அணுகியுள்ளனர்.

குறிப்பாக புதன்கிழமை குறை தீர்ப்பு முகாமில், பெற்ற மனுக்களின் தகவலின் அடிப்படையில் 3 மற்றும் 4-வது பெயர் பட்டியல் (லிஸ்ட்) தயார் செய்யப்பட்டு சோதனைக்கான ஆயத்த பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆபரேசன் அகழியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தலைமறைவாக இருப்பவர்களை தனிப்படை விரைந்து கைது செய்யும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், நில உரிமையாளர்களை யாரேனும் கட்டப்பஞ்சாயத்து மற்றும் நில அபகரிப்பு செய்யும் நபர்களோ. சரித்திர பதிவேடு குற்றவாளிகளோ நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் மூலமாக மிரட்டினாலோ அவற்றை ஆடியோ. வீடியோ, CCTV ஆதாரங்களுடன் புகார் அளிக்குமாறும்  கூறியுள்ள காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உதவி எண்.97874 64651 என்ற எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment