திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாயனூரைச் சேர்ந்த கவிதா என்பவர் மனு அளித்தார். அந்த மனுவில் எனக்கு வயது குறைவாகத்தான் இருக்கின்றது என்ற போதும் எனது வாக்காளர் அட்டையில் உள்ள பதிவின்படி எனது வயது 100 கடந்து விட்டதால் எனக்கு முதியோர் பென்ஷன் அல்லது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகிகளுக்கான பென்ஷன் வழங்குமாறு ஆட்சியரிடம் முறையிட்டது இன்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கவிதா நம்மிடம் பேசிய கவிதா, எனது வாக்காளர் அடையாள அட்டையில் 03.05.1982 என எனது பிறந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆதார் கார்டில் பிறந்த தேதியில் 1900 என வருடம் பதிவாகியுள்ளது. இதனால் எனது வயது 100- ஐத் தாண்டி காட்டுகிறது. ஆதார் அட்டையில் 1900 என்பதை 1982 என மாற்றக்கோரி நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தேன். எந்த பிரயோஜனமும் இதுவரை இல்லை.
எல்லாவித பயன்பாட்டிற்கும் ஆதார் கட்டாயம் என்பதால் எனது ஆதார் கணக்கின்படி எனது வயது 100- ஐ தாண்டியதால் எனக்கு நிறைய பிரச்சனைகள், பல இன்னல்களை தினம் தினம் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். எனது குடும்பத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகின்றன. ஏனென்றால் நாங்கள் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள், குழந்தைகள் படிப்பிற்காகவும், மற்ற தேவைக்காகவும் வங்கிகளில் லோன் எடுக்க வேண்டும் அல்லது மகளிர் சுய உதவிக் குழு லோன் எடுக்க வேண்டும் என்றாலும் யாரும் எங்களுக்கு தர மறுக்கிறார்கள்.
என்ன செய்வது என்று தெரியாமல் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக அலைந்து கொண்டிருக்கிறேன். எனவே, எனது மனுவை ஆய்வு செய்து, ஆதார் கார்டில் உள்ள பிறந்த வருட கணக்கீட்டின்படி, எனக்கு வயது 100- ஐ தாண்டி விட்டது. ஆகையால் எனக்கு முதியோர் உதவித்தொகை, 100-ஐக் கடந்ததால் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கக்கூடிய பென்ஷன் வழங்கிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை கண்டிராத புதிய வித்யாசமான ஒரு மனு என்பதால் ஆட்சியரும் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருப்பதைத் தான் நாம் பார்க்க முடிந்தது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/