மத்திய அரசின் PM SHRI பள்ளிகள் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளோம். குழு அமைத்து அதில் வேண்டியவற்றை மட்டுமே எடுத்துக் கொள்வோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
PM SHRI பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை செயலர் தலைமையில், மாநில அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், அடுத்த கல்வியாண்டான 2024-25 ஆம் ஆண்டு தொடக்கத்தில் PM SHRI பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநிலத்தால் கையெழுத்திடப்படும், என்று தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்த திட்டத்தின் படி, மத்திய அரசின் நிதி உதவியுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 16 ஆயிரத்து 500 பள்ளிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
புதிய கல்விக் கொள்கையை திமுக எதிர்த்து வரும் சூழலில், புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தும் வகையில் PM SHRI பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ், ’நவீன பள்ளிகள் திட்டம் தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும்.
தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து தான் வருகிறது. மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டியது தான் எங்களுடைய எண்ணம், என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“