அலட்சியத்துடன் நடந்து கொள்ளும் மக்கள்; சென்னை காவல் ஆணையர் வேதனை!
முகக்கவசம், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருசிலர் அலட்சியத்துடன் நடந்துகொள்வதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேதனை தெரிவித்துள்ளார். விதிகளை மீறி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுவது வெட்கக் கேடானது; கி.வீரமணி :
இந்தியாவில் கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது வெட்கக்கேடானது என்றும், இரும்புக்கரம் கொண்டு சட்டம் இதனை ஒடுக்க வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குறையும் கொரோனா தொற்று :
தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 17,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தினசரி நோய் பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், நேற்று 31,253 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் இதுவரையில், 22,92,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் :
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பாண்மை பெற்று ஆட்சி அமைத்தது. சட்டப்பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்ட நிலையில், வரும் 21-ம்ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து நாளை மறுநாள் (ஜூன் 12) இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசு அறங்காவலர்கள் நியமனம் மற்றும் கோயில்களுக்காக மாவட்ட அளவில் குழுக்களை அமைக்கிறது.
ஜூன் 12, 13ம் தேதிகளில் நடைபெறும் 47வது ஜி 7 உச்சி மாநாட்டில் பிதமர் மோடி பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் மத்தியில் காணொலி காட்சி வழியாக பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
தமிழகத்தில் இன்று புதிதாக 16,813 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 358 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரிட்டன் பிரதமரின் அழைப்பை ஏற்று வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
முன்களப்பணியாளர்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது
மதுரை கிளை உள்ளிட்ட சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 44 அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 29 அரசு வழக்கறிஞர்களும், உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமித்து தமிழக அரசு உத்தரவு
எந்த ஒரு விநியோகஸ்தரிடம் இருந்தும் ரீஃபிள் சிலிண்டரை பெற்றுக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ரீபிள் சிலிண்டர் புதிய நடைமுறை கோவை, குர்கான், சண்டிகர், புனே, ராஞ்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. வரும் 14 ஆம் தேதி முதல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் வரும் 21 ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும், அரியர் மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 17ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதிமுகவில் ஈபிஎஸ் ஒபிஎஸ் இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஜூன் 14-ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அங்கீகாரம் இல்லாத, அரசு விதிமுறைகளை பூர்த்தி செய்யாத 100க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஊரடங்கு விதிகளை மீறி ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களை அரசு குழப்பக் கூடாது என கூறினார்.
தடுப்பூசி தொடர்பாக ப. சிதம்பரம் விமர்சனம் வைப்பது ஏற்க கூடியதாக இல்லை எனவும், தேவையான அளவு தடுப்பூசியை மத்திய அரசு உற்பத்தி செய்து வருகிறது எனவும் எல்.முருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை வெளியிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில், பாஜக தலைவர் மத்திய அரசோடு பேசி நீட் இல்லை என்று அறிவித்தால் மகிழ்ச்சி தான் என மருத்துவத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் தெரவித்துள்ளர்.
பேரிடருக்கு தேவையான மருந்துகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 9.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக என் உயிர் போன்றது; கட்சியை தன்னிடம் இருந்து பிரிக்க முடியாது என்று தொண்டரிடம் பேசிய சசிகலா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 9 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் காவல்துறையினர். 20 சமையல் கலைஞர்களுடன் சப்பாத்தி, குருமா, பிரியாணி மற்றும் பச்சடி தயாரித்து வருகின்றனர் தமிழக காவல்துறையினர். சென்னை ஸ்டான்லி, ஓமந்தூரார், ராஜீவ்காந்தி, கே.எம்.சி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 3000 மருத்துவ பணியாளர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவுகளை வழங்கி வருகின்றனர்.
தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிக்க முதல்வருக்கு உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளன. கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கினை அமல்படுத்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
மும்பையில் இருந்து சென்னைக்கு 14,420 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா வழக்கு பதிவு செய்துள்ளார். மூன்று வாரங்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு
குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வேலூர் அருகே சாராயம் தாயாரிக்கப்படுகிறதா என்பதை சோதனை இட சென்ற காவல்துறையினர் மூன்று பேர் பொதுமக்கள் வைத்திருந்த பணம் மற்றும் நகையை திருடியதால் வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்
தடுப்பூசிக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்வது மட்டும் போதாது. நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். மேலும், தடுப்பூசி மையங்களுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைத்திட வேண்டும் என, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப், டிக்டாக் உள்ளிட்ட 8 சீன செயலிகளுக்கு தடை விதித்த நிலையில், தற்போதைய அதிபர் பைடன் அத்தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.
மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீதான பாலியல் புகாரில், பள்ளி நிர்வாகிகள் குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தில் ஆஜராகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கு உணவு, தங்குமிடம் வழங்குவதில் இருந்த இடைத்தரகர்கர்கள் ஒழிக்கப்பட்டதால், தற்போது மாதத்திற்கு 10 கோடி ரூபாய் மிச்சப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஆய்வு குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஆலோசனை நடத்திய பின்னரே, முடிவெடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தலைமைக் கழக அறிவிப்புகழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம். pic.twitter.com/Ba7SEz4omq
— AIADMK (@AIADMKOfficial) June 10, 2021
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 14ம் தேதி நடக்க உள்ளதாக இ.பி.எஸ் – ஓ.பி.எஸ் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஆர்டர் செய்ததில் 85,000 டோஸ்கள் கோவாக்ஸின் தடுப்பூசி இன்று சென்னை வந்தடைந்துள்ளது. இவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 6148 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94,052 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 1,51,367 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், 6148 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் சூழலில், வரும் 14-ம் தேதியோடு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்த சூழலில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முடிவுகளை எடுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கள்ளக்குறிச்சியை அடுத்த சங்காபுரத்தில் ஆம்புலன்ஸின் டயர் வெடித்து மரத்தில் மோதியதில், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரின் உறவினர்கள் இருவர் என 3 பேர் உயிரிழந்தனர்.