/indian-express-tamil/media/media_files/2025/08/04/arrest-six-2-2025-08-04-21-11-40.jpg)
Today Latest Live News Update in Tamil 04 August 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Aug 04, 2025 21:46 IST
இந்தியாவுக்கான வரி மேலும் உயர்த்தப்படும் - டிரம்ப் எச்சரிக்கை
இந்தியப் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் காரணம் காட்டி இந்தியாவுக்கு எதிராக மேலும் அதிக வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.
ட்ருத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், "இந்தியா அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை வாங்குவதுடன், அதில் பெரும்பகுதியைத் திறந்த சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்கிறது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், “உக்ரைனில் ரஷ்யப் போர் இயந்திரத்தால் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பதை அவர்கள் கவலைப்படுவதில்லை. இதனால், நான் இந்தியா அமெரிக்காவிற்குச் செலுத்தும் வரியை கணிசமாக உயர்த்துவேன்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
- Aug 04, 2025 21:07 IST
திருப்பதியில் பெண்களிடம் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்ட கும்பல் கைது
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து பெண்களின் தாலி, தங்க செயின்களை திருடி வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 87 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- Aug 04, 2025 20:20 IST
சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் பணிகளைப் பாராட்டி கமல்ஹாசன் எம்.பி அறிக்கை
அகரம் அறக்கட்டளையின் 15-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அதன் நிறுவனர் சூர்யாவிற்கு, நடிகர் கமல்ஹாசன் ராஜ்ய சபா உறுப்பினர் என்ற முறையில் ஒரு பாராட்டு கடிதம் எழுதியுள்ளார்.
- Aug 04, 2025 20:04 IST
சைபர் குற்றப் புகார்கள் மீது நடவடிக்கை; ஜூலையில் ரூ.1.6 கோடி மீட்பு
சென்னை பெருநகர சைபர் குற்றப் பிரிவு காவல் நிலையங்கள் மூலம் கடந்த ஜூலை மாதத்தில், 191 சைபர் குற்றப் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இந்தப் புகார்களின் மீது காவல் துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட 1 கோடியே 65 லட்சத்து 30 ஆயிரத்து 234 ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விரைவான விசாரணைகள், 1930 என்ற அவசர அழைப்பு எண் மூலம் பெறப்படும் புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம், சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணத்தை உடனடியாக மீட்டெடுக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- Aug 04, 2025 19:29 IST
த.வெ.க. மதுரை மாநாடு தேதி மாற்றம் - ஆனந்த் அறிவிப்பு
ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிக்குள் மாநாடு நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது அதனால், மாநாடு நடைபெறும் தேதியினை த.வெ.க தலைவர் விஜய் நாளை அறிவிப்பார் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
- Aug 04, 2025 18:23 IST
டெல்லியில் மீரா மிதுன் கைது - பரபரப்பு பின்னணி
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், 3 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள மீரா மிதுனை ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் சுற்றி வந்த மீரா மிதுனை மீட்கக் கோரி அவரது தாய் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி போலீசாரால் பிடிக்கப்பட்ட மீரா மிதுன், அங்குள்ள அரசு காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
- Aug 04, 2025 18:03 IST
சென்னை: நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (05.08.2025) தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-43 வார்டு-63, வார்டு-66, வார்டு-162, வார்டு-170, ஆசிரியர் காலனி, லேக்வியூ சாலையில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பிரசன்னா வெங்கடேஷ்வர பெருமாள் திருமண மண்டபம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- Aug 04, 2025 17:31 IST
”தலைநகர் டெல்லியின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி”
சுதா எம்.பி. செயின் பறிப்பு விவகாரத்தில் தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தலைநகரின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலையில், மக்களுக்காக பணிபுரியும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட பாதுகாப்பின்றி இருப்பது மிகவும் வேதனைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
- Aug 04, 2025 17:14 IST
”விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்”
2026-ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு முழு நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறினார். நெல்லையில், விவசாயிகளுடன் கலந்துரையாடிய அவர், இதனை கூறினார்.
- Aug 04, 2025 17:06 IST
27 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்காசி, விருதுநகர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Aug 04, 2025 17:05 IST
நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
பட்டியலின மக்களை அவதூறாக பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில், நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
- Aug 04, 2025 17:04 IST
இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி; தொடர் சமன்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடி இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 396 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
- Aug 04, 2025 16:25 IST
பிரதமர் மோடிக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்
SSC தேர்வு நடைமுறைகள் திருத்தப்பட்டு எளிதாக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.
- Aug 04, 2025 15:50 IST
"கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்"
இப்போது கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்.
- பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு
#Watch | "இப்போது கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் அறிவிப்போம்.."
— Sun News (@sunnewstamil) August 4, 2025
- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பு#SunNews | #DMDK | #PremalathaVijayakanthpic.twitter.com/S1I4EjUqDy - Aug 04, 2025 15:48 IST
மீண்டும் சர்ச்சையில் டிரம்ப்
நடிகை சிட்னி ஸ்வீனிக்கு சிறந்த ஜீன்ஸ் உள்ளது என்ற வாசகத்துடன் கடந்த வாரம் வெளியான விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை சிட்னி ஸ்வீனியின் விளம்பரத்தை விரும்புவதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.
- Aug 04, 2025 14:51 IST
விமர்சனத்துக்கு ஆளான டிரம்ப்
நடிகை சிட்னி ஸ்வீனிக்கு சிறந்த ஜீன்ஸ் உள்ளது என்ற வாசகத்துடன் கடந்த வாரம் வெளியான விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகை சிட்னி ஸ்வீனியின் விளம்பரத்தை விரும்புவதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்
- Aug 04, 2025 13:59 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சி.பி.ஐ விசாரணை கோரி மனு
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு குறித்து ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்கக் கூடாது என்று அரசு தாப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- Aug 04, 2025 13:22 IST
புதிய டிஜிபி நியமன விவகாரம் - வழக்கு தள்ளுபடி
புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியிலான விவகாரத்தில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் தாமோதரன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி. புதிய டிஜிபி நியமனம், உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
- Aug 04, 2025 13:10 IST
சிறுமியை கடித்த ராட்விலர் நாய்
தண்டையார்பேட்டையில் 7 வயது சிறுமியின் முகத்தில், கொடூரமாக கடித்த ராட்விலர் நாய். நாயின் வாயை பிளந்து சிறுமியை கஷ்டப்பட்டு காப்பாற்றியதாக தந்தை தகவல். சிறுமிக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. ஆர்.கே.நகர் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடந்து வருகிறது.
- Aug 04, 2025 12:55 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை-சிபிஐ விசாரணை கோரி வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு குறித்து ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை கேட்ட மனுவை ஏற்கக் கூடாது என்று அரசு தாப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- Aug 04, 2025 12:43 IST
கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி கைது
திருவேற்காட்டில் கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற மனைவி விஜயகுமாரி கைது செய்யப்பட்டார். பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண் நண்பர் சுரேஷுடன் பழகுவதை கணவர் கண்டித்ததால் கூலிப்படை ஏவி கொலை செய்தது அம்பலம் ஆகி உள்ளது.
- Aug 04, 2025 12:41 IST
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக செய்யாறில் 9 செ.மீ. மழை பதிவு
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 9 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேடவாக்கம், தாம்பரத்தில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.
- Aug 04, 2025 12:41 IST
சிபு சோரன் மறைவுக்கு அன்புமணி இரங்கல்
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். 18 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்து பழங்குடியின மக்களுக்கு போராடியவர் சிபு சோரன் என புகழஞ்சலி செலுத்தினார்.
- Aug 04, 2025 12:31 IST
ஓடிபி விவகாரம்- திமுகவின் வழக்கு தள்ளுபடி
திமுக உறுப்பினர் சேர்க்கைக்கு ஓடிபி பெற தடை விதித்ததை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- Aug 04, 2025 12:03 IST
இந்தியராக இருந்தால் ராணுவத்தை விமர்சித்திருக்க மாட்டீர்கள் - ராகுல் காந்தி மீது சுப்ரீம் கோர்ட் காட்டம்
இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கருத்துரிமை என்ற பெயரில் எல்லாவற்றையும் பேச முடியாது என கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், உண்மையான இந்தியராக இருந்தால் ராணுவத்தை விமர்சித்திருக்க மாட்டீர்கள் என்றும் ராகுல் காந்தியை கடிந்து கொண்டுள்ளது. இதனிடையே, அவதூறு வழக்கு என்ற பெயரில் ஒருவருக்கு தொல்லை அளிக்கக்கூடாது என ராகுல் காந்தி தரப்பு வாதிட்டுள்ளது.
- Aug 04, 2025 11:41 IST
உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மயிலாடுதுறை எம்பி. சுதா கடிதம்
டெல்லியில் நடந்த செயின் பறிப்பு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மயிலாடுதுறை எம்பி. சுதா கடிதம் அனுப்பி உள்ளார். டெல்லியில் தூதரகங்கள், மாநில அரசின் இல்லங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த சாணக்யாபுரி பகுதியில் நடைபயிற்சியின்போது சுதா எம்.பி.யிடம் செயின் பறிப்பு நடந்தது. செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்யுமாறு கடிதத்தில் சுதா எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
- Aug 04, 2025 11:39 IST
மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் வலியுறுத்திய நிலையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
- Aug 04, 2025 11:36 IST
”EV வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடுதான்”
இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்களில் 40% தமிழகத்தில் உற்பத்தியாவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. மின்சார கார் உற்பத்தி தொடங்கிவைத்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு. சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட் என்றார்.
- Aug 04, 2025 11:20 IST
மாடுகளை அழைத்துச் சென்று போராட்டம் - சீமான் மீது வழக்கு
வனத்துறையின் தடையை மீறி பேரிக்காடுகளை தூக்கி எறிந்து சீமான் அவரது ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் வனத்துறையினரின் தடையை மீறி நாட்டு இன மாடுகளை மலை பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 50 நபர்கள் குறித்து விசாரணை செய்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
- Aug 04, 2025 10:58 IST
வங்க மொழி அவமதிக்கப்பட்ட விவகாரம்- ஸ்டாலின் கண்டனம்
உள்துறையின் கீழ் செயல்படும் டெல்லி காவல்துறை வங்கமொழியை வங்கதேச மொழி என்று குறிப்பிட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தேசிய கீதம் பாடல் எழுதப்பட்ட வங்கமொழி மீதான நேரடி தாக்குதல். நாட்டின் பன்முகத் தன்மையை சிறுமைப்படுத்தும் செயலில் உள்துறை ஈடுபட்டுள்ளது என முதல்வர் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது X பதிவில், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை “வங்காள மொழி” என்று வர்ணித்துள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேரடி அவமானம் என்று குறிப்பிட்டுள்ளார்.
- Aug 04, 2025 10:54 IST
த.வெ.க. மாநாடு நடைபெறும் தேதி மாற்றமா?
தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். விநாயகர் சதுர்த்தி 27-ந்தேதி கொண்டாடப்பட உள்ளதால், மாநாடு தேதியை மாற்றுமாறு தவெகவிடம் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து 17-ந்தேதி மாநாடு நடத்திக்கொள்வதாக தவெக தரப்பில் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுதந்திர தினத்தை காரணம் காட்டி 17-ந்தேதியும் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. 18 முதல்22-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தவெக மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- Aug 04, 2025 10:53 IST
வின்ஃபாஸ்ட் EV கார் ஆலையை திறந்து வைத்த ஸ்டாலின்
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். தூத்துக்குடி -மதுரை புறவழிச்சாலையில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் மின்சார கார் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.16,000 கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம். மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப் 6, வி.எப் 7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.
- Aug 04, 2025 10:18 IST
கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!
இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும், அவர் கணவரும் பிரியும் முடிவை கைவிட்டுள்ளனர். தனது கணவர் பருபள்ளி காஷ்யப்புடனான புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சாய்னா நேவால், சில நேரங்களில் தூரம் என்பது ஒருவர் நம் வாழ்வில் இருப்பதன் மதிப்பை புரிய வைக்கிறது. மீண்டும் எங்கள் உறவை, இணைக்க முயற்சிக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Aug 04, 2025 10:13 IST
தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீடு செய்கிறது YEEMAK
தூத்துக்குடியில் ரூ.3,500 கோடி முதலீட்டில் அச்சிடப்பட்ட சர்கியூட் போர்ட் தொழிற்சாலையை அமைக்கிறது எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான YEEMAK. இதன்மூலம் 7,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
- Aug 04, 2025 10:06 IST
சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டார் ஸ்டாலின்
தூத்துக்குடியில் மின்சார கார் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் வி.எப்-6, வி.எப்-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்கு தயாராக உள்ளன. வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா மற்றும் கார் முதல் விற்பனை தொடக்க விழா ஆகியவை இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஸ்டாலின் தூத்துக்குடி புறப்பட்டுள்ளார்.
- Aug 04, 2025 10:03 IST
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு
டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு - காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்தின் போது எம்.பி. சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது
- Aug 04, 2025 10:01 IST
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மரணம்
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜே.எம்.எம். கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81), சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்று அவர் உயிரிழந்தார்.
- Aug 04, 2025 08:46 IST
திருப்பதியில் சூர்யா - ஜோதிகா சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக நடிகர் சூர்யா தன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வெளியே ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி
- Aug 04, 2025 08:24 IST
"பகவான் கிருஷ்ணரை முதல்வர் வேண்டியதால் மழை பெய்கிறது"
பகவான் கிருஷ்ணரை முதலமைச்சர் வேண்டியதால் மழை பெய்வதாக ராஜஸ்தான் அமைச்சர் கே.கே.விஷ்ணோய் தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினையின் பொறுப்பை கடவுள் மீது சுமத்துவது கேலிக்கூத்தாக உள்ளதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது,
- Aug 04, 2025 08:20 IST
பீகாரில் கனமழை: திறந்து 3 மாதங்களே ஆன ஈரடுக்கு பாலம் சேதம்
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், பாட்னாவில், திறந்து மூன்று மாதங்களே ஆன இரட்டை அடுக்கு பாலத்தில் சேதமடைந்துள்ளது, 422 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலத்தின் நடுவே பள்ளம் உருவானதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- Aug 04, 2025 08:19 IST
கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றம் நிறுத்தம்
தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 5 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
- Aug 04, 2025 08:17 IST
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு: அரங்கத்தை ஆய்வு செய்த கீதா ஜீவன்
தூத்துக்குடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ள அரங்கில் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் அமைச்சர் கீதா ஜீவன்
- Aug 04, 2025 07:24 IST
ஸ்டாலினுடனான சந்திப்பில் எவ்வித அரசியலும் இல்லை- ஒ.பி.எஸ்.
நலம் விசாரிக்கவும், மு.க.முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவும், மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். இந்த சந்திப்பில் எவ்வித அரசியலும் இல்லை. இந்த சந்திப்பை அரசியல் ஆக்குவது நாகரீகமற்ற செயல். என் மனைவி மற்றும் தயார் இறந்தபோது என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியவர் மு.க.ஸ்டாலின் என்று ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.