பி.ரஹ்மான். கோவை
தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் பட்டியல் 6 மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. அந்த வகையில் அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையில் சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்து வமனைகளில் பட்டியலை என்.எச்.எம் மற்றும் டி.என்.எச்.எஸ்.ஆர்பி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கோவை அரசு மருத்துவமனைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனைக்கும் தினமும் உள்நோயாளிகள் – புறநோயாளிகள் என சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். இந்த மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்பதால், இதயம், சிறுநீரகம், மகப்பேறு, பெண்கள் நலன்; எலும்பு முறிவு, பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண், குழந்தைகள் நலன் என பல்வேறு துறைகளில் நவீன சிகிச்சைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் சிறப்பாக செயல்பட்ட தமிழக மருத்துவமனைகளின் பட்டியலில், கோவை அரசு மருத்துவமனை 3-வது இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முதலிடமும் சேலம் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடமும் பிடித்துள்ளது.

மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட கேத்லேப், இசிஜி, விஷ மருந்து அருந்துதல், பாம்பு மற்றும் விஷக்கடி, அவசர சிகிச்சை, புறநோயாளிகள், உள்நோயாளிகள் எண்ணிக்கை உள்ளிட்டவை அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் 3-வது இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது என கோவை அரசு மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil