திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோம்பையின் பொங்கல் விழா என்றாலே, பலருக்கும் ஆர்வம் கிளம்பிவிடும். இவர்கள் நடத்தும் பொங்கல் விழா மிகவும் வித்தியாசமானது. அதனால்தான், வருடா வருடம், இவர்களது பொங்கல் கொண்டாட்டங்கள் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
கோம்பை, வண்ணாடு ஆகிய ஊராட்சிகளை உள்ளடக்கி, செம்புளிச்சான்பட்டி, மேலூர், சின்ன இலுப்பூர், பெரிய இலுப்பூர், தேன்பாடி, பாளையம், நாகூர், தாளூர் என கிட்டத்தட்ட 33 கிராமங்கள் உள்ளன.. இந்த கிராமங்களில் மலைவாழ் மக்களே அதிகமாக வசித்து வருகிறார்கள். எப்போதுமே அனைவரும் பொங்கல் பண்டிகை தினத்தன்று, சூரிய பொங்கல் வைப்பார்கள். ஆனால், இவர்கள் மாலையில்தான் பொங்கல் வைக்கிறார்கள்.
இதற்கு காரணம், இங்குள்ள பச்சைமலையில் கடுமையான பனிப்பொழிவு காலை 10 மணி வரை நிலவும். அதனாலேயே பொங்கல் பண்டிகையினை மாலையில் வைத்து வழிபடுகிறார்கள். இந்த பழக்கம் பல நூறு காலமாகவே இவர்களிடம் நிலவி வருகிறது. அதுமட்டுமல்ல, இவர்களில் ஆண்கள் மட்டுமே பொங்கல் வைப்பார்களாம். பெண்கள் பொங்கல் வைக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆண்களே பொங்கல் வைத்து சூரிய வழிபாட்டையும் செய்கிறார்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/01/17/pongal-pachamalai2.jpg)
இந்த பொங்கலையும், தாங்களே பச்சைமலையில் விளைவித்த அரிசி உள்ளிட்டவைகளை பயன்படுத்தியே செய்கிறார்கள். அதாவது அரிய நெல் வகைகளான புழுதிகார நெல், மர நெல், தூண்கார நெல் ஆகிய நெல் வகைகளை மட்டுமே இவர்கள் பொங்கல் வைக்க பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக இந்த நெல்கள் பயிரிடப்பட்டு, இயற்கையான உரங்களை மட்டுமே பயன்படுத்தி வளர்க்கிறார்களாம். சிறிதுகூட ரசாயன உரம் கலப்பில்லாமல் அரிசியை பெறுகிறார்கள். இந்த அரிசியில்தான் பொங்கல் வைக்கப்படுகிறது.
அதேபோல, மலைப்பகுதியில் விளையும் தும்பைப் பூ, பண்ணைப்பூ அருகம்புல், ஓனாண் பூ ஆகிய பூக்களை மட்டுமே கடவுள்களுக்கு அன்றைய தினம் பயன்படுத்துகிறார்கள். வீட்டின் வாசலில், மாவிலை, பாலை இலை, பூளாப்பூ ஆகிய மலையில் விளையக்கூடிய பூக்களை கொண்டு தோரணம் கட்டிவிட்டு, அதற்கு பிறகே வாசலில் விறகு அடுப்பு வைத்து பொங்கல் வைக்கிறார்கள்.
இறுதியாக, புதுமண தம்பதிகளுக்கும், உறவினர்களுக்கும் பச்சை மலையில் விளையக்கூடிய புழுதிகாரநெல், மரநெல், தூண்கார நெல் வகைகளில் தூண்கார நெல்களை, பொங்கல் சீர்வரிசையாக கொடுத்து அனுப்புகிறார்கள். மாலையில் ஆண்கள் அனைவரும் பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதுமே, அன்று இரவு ஏராளமான நிகழ்ச்சிகளை ஒன்றுகூடி நடத்துவார்களாம். குறிப்பாக, வழுக்கு மரம் ஏறுதல், ஆடல் பாடல் நிகழ்ச்சி என கச்சேரிகள் அமர்க்களப்படுமாம்.
மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளும் பச்சை மலைப் பகுதிகளில் நேற்றைய தினம் நடத்தப்பட்டன.. ஆண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்ததுமே, இரவில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விதவிதமான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். பழமை மாறாமல் கொண்டாடப்பட்டு வரும், இந்த பச்சை மலையில் வைக்கப்பட்ட பொங்கல்தான், இணையத்தில் வைரலாகி வருகிறது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“