Advertisment

கால்நடை அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ்; வழங்கப்படும் சேவைகள் என்ன? தொடர்பு கொள்வது எப்படி? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 1962 என்ற கட்டணமில்லா பிரத்யேக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் - அமைச்சர் சிவசங்கர்

author-image
WebDesk
New Update
Siva Shankar ambulance

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அரியலூரில் தொடங்கி வைத்தார்.

Advertisment

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். அரியலூர் எம்.எல்.ஏ-வான கு.சின்னப்பா, எஸ்.பி ச.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, 4 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் சிவசங்கர், “கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடுவதிலும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும் மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளிக்கவும், இரண்டாம் வெண்மை புரட்சியை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தமிழக முதல்வரால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 4 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் இன்று வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து, மருத்துவ வாகனத்தை பார்வையிட்டு, வாகனத்தில் உள்ள நவீன வசதிகள் குறித்து கேட்டறிந்து, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இதில், ஆண்டிமடம் கால்நடை மருந்தகத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு வாகனமும், அரியலூர் கால்நடை மருத்துவமனையை தலைமையிடமாக கொண்டு ஒரு வாகனமும், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஒன்றியங்களுக்கு செந்துறை கால்நடை மருந்தகத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு வாகனமும், திருமானூர் கால்நடை மருந்தகத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு வாகனமும் செயல்பட உள்ளது.

இந்த கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியில் இருப்பர். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் கால்நடை மருத்துவ சிகிச்சைப் பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்ளும். பிற்பகலில் கால்சென்டர் மூலம் பெறப்படும் அவசர சிகிச்சை பணிகளை மேற்கொள்ளும்.

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 1962 என்ற கட்டணமில்லா பிரத்யேக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். கால்நடை மருத்துவ வாகனங்கள், கால்நடை சிகிச்சை முகாம்கள், கால்நடை தடுப்பூசி முகாம்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு முகாம்களிலும் செயல்படுத்தப்படும்.

ஒரு லட்சம் கால்நடை எண்ணிக்கை அலகுகள் கொண்ட பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற இலக்கைக் கொண்டு கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கால்நடை சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள், சிறிய ஆய்வுக்கூடம், தடுப்பூசிகளுக்கான குளிர்சாதனப்பெட்டி போன்ற நவீன வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் எம்.ஹமீது அலி, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் ரமேஷ், முருகேஷ், கால்நடை மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment