காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் மரணம்; 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவிகள் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக இன்று (பிப்.15) உடற்கல்வி ஆசிரியருடன் வந்துள்ளனர்.
Advertisment
போட்டியில் பங்கேற்றுவிட்டு அவர்கள் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகள் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் அவர்களை மீட்க முயற்சித்துள்ளனர்.
தொடர்ந்து இது குறித்து மாயனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் கரூர் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை நிலையங்களுக்கு தகவல் அளித்தனர். இரு நிலைய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை வீரர்கள் மாயனூர் காவிரி ஆற்றில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மாணவிகளை தேடிய நிலையில் தமிழரசி, இனியா, லாவண்யாவின் உடல்கள் அடுத்தடுத்து சடலமாக மீட்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் சோபிகாவின் உடலும் மீட்கப்பட்டது. இதில் உயிரிழந்த மாணவிகள் அல்லாத நீரில் மூழ்கிய 3 மாணவிகளை கீர்த்தனா என்ற மாணவி மீட்டுள்ளார். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிந்த சம்பவம் விராலிமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவிரியில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், மாயனூர் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸடாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கால்பந்து விளையாட்டில் கலந்துகொண்ட பின்னர் புதன்கிழமை (பிப்.15) காலை கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் கிராமத்தில் செல்லாண்டியம்மன் கோயில் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
அப்போது, சோபியா த/பெ.வெள்ளைச்சாமி (7ம் வகுப்பு), தமிழரசி த/பெ. ராஜ்குமார் (8ம் வகுப்பு), இனியா த/பெ.மோகன்குமார் (6ம் வகுப்பு) மற்றும் லாவண்யா த/பெ. பெரியண்ணன் (6ம் வகுப்பு) ஆகிய நான்கு மாணவிகள் எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவிகளை விளையாட்டுப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்ற விராலிமலை ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் பொட்டு மணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசாய் இப்ராஹிம், உடற்கல்வி ஆசிரியர் திலகவதி உள்ளிட்டவர்களை பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் பணியிடை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/