திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒரு வீட்டின் முன், நாட்டு வெடியை வீசிச்சென்ற 3 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அவர்கள் தப்பிக்க முயன்றபோது 2 பேருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாநகரத்தில் காமினி காவல் ஆணையராக பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்காவல் பாரதி தெருவை சேர்ந்த, ஸ்ரீரங்கம் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான மணிகண்டன் (எ) ஆட்டுத்தலை மணி என்பவர், வீட்டில் குடும்பத்தினருடன் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தகாத வார்த்தையால் பேசி மர்ம பொருளை வீசிவிட்டு சென்றுள்ளனர். அந்தப்பொருள் கீழே விழுந்தபோது பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்தவர்கள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு சென்று இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவ இடத்தில் தடய அறிவியல் உதவி இயக்குநர் நேரில் பார்வையிட்டும் மாதிரிகளை சேகரித்தும், விசாரணை மேற்க்கொண்டனர்.
அப்போது வீட்டின் வாசலில் இரண்டு பெரிய நாட்டு வெடி (வெங்காய வெடி) வீசி சென்றுள்ளார்கள் எனவும், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கம் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புகார்தாரர் அடையாளம் தெரிவித்த நபர்களை பற்றி புலன் விசாரணை கடந்த 2 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. சி.சி.டி.வி. அடிப்படையில் போலீஸ் விசாரணையில், வரதராஜன், முகேஷ் சடையன் (எ)அய்யப்பன் ஆகிய 3 பேரும் முன்விரோதம் காரணமாக வீட்டின் வாசலில் நாட்டு வெடி வீசிவிட்டு தப்பிச்சென்று தலைமறைவாக இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அவர்களை தீவிரமாக தேடிய காவல்துறையினபுர் கைது செய்ய முயன்றபோது, வரதராஜன், முகேஷ் ஆகியோர்கள் தப்பிக்க முயன்று சுவர் ஏறிக்குதித்தனர். இதில் இருவருக்கும் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் 3 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதன் பேரில் மேற்படி மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணையில் வரதராஜ் மீது அடிதடி, வழிப்பறி, போக்சோ என 5 வழக்குகள், முகேஷ் மீது அடிதடி வழக்கு, வழிப்பறி என 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கினை விரைவாக விசாரணை செய்து, குற்றவாளிகளை விரைந்து கைது செய்த காவல் ஆய்வாளர், தனிப்படையினர் மற்றும் காவல் அதிகாரிகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாரட்டினார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“