திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் பகுதிகளை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காவிரிப் பாலம் கடந்த 1976-ம் ஆண்டு, முன்னாள் மத்திய உள்ளாட்சித்துறை அமைச்சர் பிரம்மானந்தா ரெட்டியால் திறந்து வைக்கப்பட்டது.
இந்தகாவிரி பாலம் நீளம் 541.4 மீட்டர், அகலம் 15 மீட்டர், நடைபாதையின் அகலம் 2.05 மீட்டர், இந்தப் பாலத்தில் 34.1 மீட்டர் கொண்ட 14 கண்களும், 33.3 மீட்டர் கொண்ட இரண்டு கண்களும் உடையது. ஸ்ரீரங்கம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக விளங்குவதால் இந்தப் பாலத்தை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பாலம் கட்டி 45 ஆண்டுகளுக்கும் மேலானதால் இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. காவிரி பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த அதிமுக ஆட்சியில் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1.35 கோடி, 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சம், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால், கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக்குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசு பாலத்தை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டு ரூ.6.87 கோடி நிதியை ஒதுக்கி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டது.
தற்போது 95 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் திறப்பு விழாவிற்கு காவிரி பாலம் காத்திருக்கிறது. பாலம் இறுதிப் பணிகள் முடிவடைந்த நிலையில், ஈரோடு தேர்தல் பணிகளால் பாலம் திறப்பு தள்ளிப் போவதாக பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டினர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு மூன்றாம் தேதி பாலம் திறக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில் ஈரோடு தேர்தல் முடிவுகள் ஆளும் திமுக கூட்டணி கட்சிக்கு பெரும் வெற்றியை கொடுத்தது. தேர்தல் முடிவுகள் வந்துவிட்ட நிலையில் நாளை அமைச்சர் குறிப்பிட்டபடி காவிரி பாலம் திறக்கப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தார் சாலை போடும் பணிகள் நிறைவடைந்துள்ளது. பாலத்தின் கைப்பிடிச்சுவர்களில் வண்ண எழுத்துக்கள் எழுதப்பட்டன,
பாலத்தின் பக்கவாட்டு நடை மேடைகளில் டைல்ஸ் பதிக்கும் பணி நிறைவடைந்து இருந்தாலும், பல்வேறு இடங்களில் நடைமேடை டைல்ஸ்கள் பெயர்ந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது. இந்த சூழலில் நாளை பாலம் திறப்பு சத்தியமாகுமா இந்தக் கேள்விக்குறியுடன் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். அதே நேரம் நாளை பாலம் திறக்காவிட்டால் பாஜக சார்பில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை என அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.