திருச்சி மாநகராட்சியில் அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அலங்கார தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளன.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2, வார்டு 47 க்கு உள்பட்ட பகுதியில், டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் கீழ் பகுதியில், அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கென மாநகராட்சியில் ரூ.50.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பாலத்தின் கீழ் புல்தரை, பூச்செடிகளுடன் கூடிய சிறு பூங்கா, துருப்பிடிக்காத இரும்பு குழாய்கள், தகடுகளால் ஆன அலங்கார தடுப்புகள், வண்ண ஓவியங்கள், அலங்கார மின் விளக்குகளால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது.
இப்பணிகளில், தடுப்புகளில் பெரிய வாள் போன்ற கூர்மையுடன் கூடிய அலங்கார தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவற்றின் நுனிப்பகுதி, மிகவும் கூர்மையான வாள்போன்ற அமைப்புடன் ஆபத்துகளை ஏற்படுத்தும் விதமாக அமைக்கப்படுள்ளன. மேம்பாலத்தின் அடியில், பசுமையான பூச்செடிகள், புல்தரையுடன் கூடிய சிறு பூங்கா அமைக்கப்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்த சிறார்கள் அதற்குள் வந்து செல்ல வாய்ப்புகள் உண்டு.
அப்போது அவர்கள் அந்த தடுப்புகளில் கைவைத்தாலோ அல்லது ஏறி இறங்கினாலோ கூர்மையான பகுதியால் கிழித்து, குத்தி உயிரை குடிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து, கடந்த மாமன்ற கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி, ஆபத்து ஏற்படாத வகையில் அலங்கார தடுப்புகள் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவற்றையும் மீறி, கூரிய வாள்போன்ற அலங்கார தடுப்புகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து வருகின்றது.
இது குறித்து மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் உள்ளிட்ட சில சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுமக்கள் அதிகளவில் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இது போன்று ஆயுதங்கள் போல் உள்ள அலங்கார தடுப்புகள் அமைக்கக் கூடாது. அப்படி அமைக்கப்பட்டிருக்கும் அலங்காரத் தடுப்புகளால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. அந்த தடுப்புகளில் ரப்பர்களால் ஆன பாதுகாப்பு உறைகளையாவது பொருத்தப்படுவது அவசியம். சாலை விபத்துகள் வாடிக்கையாகிவிட்ட நிலையில், சாலையில் செல்லும் இருசக்கர வாகனமோ, காரோ விபத்துக்குள்ளாகி அந்த தடுப்பின்மீது சாயும்போது விபத்தில் உயிரிழக்காதவர்கள் அந்த தடுப்பு கட்டைகள் குத்தி உயிரிழக்க நேரிடும்.
ஒருவேளை மேம்பாலத்தில் இருந்து விபத்துக்குளாகி வாகனங்களோ, பயணித்தவர்களோ கீழே விழும் நிலையில், காயங்களுடன் உயிர் பிழைக்க வேண்டியவர்களும் இந்த கூர்மையான தடுப்பில் குத்தி உயிரிழக்க நேரிடும். அலங்காரம் என்ற பெயரில் மாநகர மக்களை மாநகராட்சி நிர்வாகம் கொள்ளத்துடிக்கின்றதோ என்ற கேள்வி எழுகின்றது. ஆகவே, உடனடியாக இதில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆட்சியரிடம் புகார் கொடுக்கும் நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க பொருளாளர் கே.சி. நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார், சிலம்பம் கார்த்தி, ஷர்மிளா, அகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.