திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில் லூர்துசாமி அரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மண்டலத் தலைவர்கள் துர்காதேவி, மு.மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், பி.ஜெயநிர்மலா , மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துணை ஆணையர், நகரப் பொறியாளர், நகர் நல அலுவலர், செயற் பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.
மாநகராட்சி கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே, மாமன்றத்தில் பங்கேற்ற துணை மேயர் உள்பட திமுக கவுன்சிலர்கள் பெரும்பாலானோர் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி மேயருக்கு எதிராக குரல் கொடுத்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து தி.மு.க வட்டாரத்தில் கூறுகையில், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் செயல்பட்டு வருபவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவரது தொகுதிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பை கிடங்கு பயன்பாட்டில் உள்ளது. இந்த குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்பது பல வருட கோரிக்கையாக அப்பகுதி வாழ் மக்கள் மத்தியில் உள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தேர்தல் வாக்குறுதியாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அப்பகுதி பொதுமக்களிடம் குப்பை கிடங்கை அகற்றுவதாக வாக்குறுதி அளித்து இருந்தார். மாநகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர் கோரிக்கையை விடுத்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் கோழி கழிவுகளை வைத்து மீன் தீவனம் தயாரிக்கும் பணிக்கு மாநகராட்சி மேயர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் முதற்கட்ட நடவடிக்கைகளாக பெருமளவு தொட்டி தோண்டும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்டித்து அரியமங்கலம் பகுதிக்கு உட்பட்ட மேல அம்பிகாபுரம், திடீர் நகர் பகுதி மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இடமும் முறையிட்டனர். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுமான பணிகளை உடனே நிறுத்த ஆணையிட்டார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநகராட்சி மாமான்ற கூட்டத்தில் இந்தத் திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டது.
இதனை கண்டிக்கும் விதமாக திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா மற்றும் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்தி உள்பட தி.மு.க. கவுன்சிலர்கள் 27 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர் ரெக்ஸ், வக்கீல் கோவிந்தராஜன், முன்னாள் மேயர் சுஜாதா, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சுரேஷ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் என மொத்தம் 36 கவுன்சிலர்கள் திமுக மேயர் அன்பழகனை கண்டித்து ஒரே நேரத்தில் வெளிநடப்பு செய்தனர்.
65 வார்டுகளை கொண்ட திருச்சி மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்தது திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி தெற்கு மாவட்ட தலைவரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் திமுக மேயரை கண்டித்து வெளிநடப்பு செய்தது, திருச்சியில் கே என் நேரு - மகேஷ் பொய்யாமொழி கோஷ்டி மோதலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.
க.சண்முகவடிவேல்