திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கீழரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா்.ராஜ்கரன். இவரது நண்பரும் உடன் படித்தவருமான தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதுார் மதகுசாலை கீழத்தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி - மதுரை சாலையிலுள்ள தனியார் கல்லுாரி ஒன்றில் சுகாதார ஆய்வாளா் பணிக்கான படிப்பை படித்து வந்தனா்.இதற்காக திருச்சி எடமலைப்பட்டி புதுார் அரசு காலனி 5-ஆவது குறுக்குத்தெரு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இதனிடையே இவர்கள் இருவரும், கடந்த 25.7.2021 அன்று இரவு தாங்கள் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் 'ஓ' பாலம் வழியாக நடந்துசென்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த எடமலைப்பட்டி புதுார் கொல்லாங்குளம் பாரதி நகா் பகுதியைச் சோ்ந்த எம். அபுதாகீர் என்கிற அப்புச்சி மற்றும் அதே பகுதி நாயக்கா் தெருவைச் சோ்ந்த முகமது யாகூப் ஆகியோர் மாணவர்களை வழிமறித்து, ராஜ்கரன் மற்றும் ராஜேந்திரன் ஆகிய இருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவா்களிடம் இருந்து 2 கைப்பேசிகள், ரூ.3,700 ரொக்கம், ஏடிஎம் அட்டை, ஆதார்கார், பான்கார்டு ஆகியவற்றைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த எடமலைப்பட்டிபுதூா் போலீசார் அபுதாகீர் மற்றும் முகமது யாகூப் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு,திருச்சி மாவட்டத் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் வாத, பிரதி வாதங்கள் நிறைவுற்ற நிலையில், இந்த வழக்கில் நேற்று மாலை தீா்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றம் உறுதியானதையடுத்து, அபுதாகீர் மற்றும் யாகூப் ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனா சந்திரா உத்தரவிட்டார், அரசு தரப்பில் மூத்த அரசு சிறப்பு வழக்குரைஞா் ஹேமந்த் ஆஜானார்
க.சண்முகவடிவேல்