/indian-express-tamil/media/media_files/2025/08/13/lanch-2025-08-13-23-45-15.jpg)
திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார்கோட்டை, விவேகானந்தா நகரில் வசித்து வரும் ராமசாமி என்பவரது மகன் முத்துராமலிங்கம் என்பவர் தனது பெயரில் உள்ள இடத்தில் திருச்சி மாநகராட்சியில் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வது தொடர்பாக கடந்த 08.09.2009 ஆம் ஆண்டு மேலகல்கண்டார்கோட்டை, வார்டு அலுவலகத்தில் பணிபுரியும் வருவாய் உதவியாளர் சுபேர்அலி என்பவரை சந்தித்து தனது வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்யுமாறு கூறியுள்ளார்.
இதை கேட்ட வருவாய் உதவியாளர் சுபேர்அலி ரூ.8,000/- லஞ்சமாக கேட்டு, பின்னர் ரூ.6,500/- லஞ்சம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இது தொடர்பாக முத்துராமலிங்கம் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கடந்த 08.09.2009 ஆம் தேதி புகார் கொடுத்ததை அடுத்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து 09.09.2009 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையில், புகார்தாரர் முத்துராமலிங்கம் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.6,500/- ஐ சுபேர் அலி முகமது கேட்டு பெற்றபோது , திருச்சி லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 13.08.2025ஆம் தேதி விசாரணை முடிவுற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதில், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு, பொன்மலை கோட்டம், மேலகல்கண்டார்கோட்டை, 30வது வார்டு அலுவலக முன்னாள் வருவாய் உதவியாளர் சுபேர் அலி என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் அரசு பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.