திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசுகையில், 858 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகிறது. இதில் தற்போது வரை 650 கிலோமீட்டர் தொலைவுக்கு பணிகள் முடிந்துள்ளது என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து கவுன்சிலர் காஜாமலை விஜி (திமுக) பேசும்போது, எனது வார்டில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. பொதுமக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. முடியவில்லை என்று சொன்னால் சொல்லுங்கள் நானே என் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்கிறேன் என்று ஆவேசமாக கூறினார்.

இதனிடையே கூட்டத்தில் வாசிக்கப்பட்ட 53-வது தீர்மானத்தில், திருச்சி மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 65 வார்டு பகுதிகளிலும் உள்ள குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குப்பை சேகரிக்கும் பணியினை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதற்கு தேவைப்படும் பணியாளர்களையும், தேவைப்படும் வாகனங்களில் மாநகராட்சி ஒதுக்கீடு செய்யும் வாகனங்களை அதற்கு நிர்ணயம் செய்துள்ள வாடகை செலுத்தியும், தேவைப்படும் கூடுதல் வாகனங்களை நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்து மேற்கொள்ளும் பணிக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரின் செயல்முறை உத்தரவுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் வீடுகள் வர்த்தக நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்கும் பணி தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் விவாதத்துக்கு பின்னர் நிறைவேற்றப்படும் என கூறப்பட்டிந்தது. மேலும் செலவினத்தை 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை ரூபாய் 40 கோடியிலிருந்தும் மற்றும் 15-வது மத்திய நிதி குழு 2022-23 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை தலைப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ரூபாய் 22 கோடியில் இருந்தும் மேற்கொள்ள அனுமதி அளிக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்தில், கழிப்பிட வசதி, கட்டிட வசதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம், வார்டு பணிகள், தெருவிளக்கு பணிகள் உள்ளிட்ட 54 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 53-வதாக நிறைவேற்றப்பட்ட 65 வார்டுகளிலும் குப்பை சேகரிக்கும் பணி தனியார் மயமாவதை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகாளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத் தலைவர்கள் ஆண்டாள் ராம்குமார், மு. மதிவாணன், த.துர்காதேவி, பு.ஜெய நிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil