திருச்சி மேல்கல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிர்ப்புறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை மறைந்த பேராசிரியர் அன்பழகன் 1984 திறந்து வைத்தார். இந்த சிலைக்கு தி.மு.க.வினர் அவ்வப்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அண்ணா சிலைக்கு சில மர்மநபர்கள் காவி சாயம் பூசி நெற்றியில் குங்குமம் வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி தி.மு.க கவுன்சிலர் முருகானந்தம் வட்டச் செயலாளர் தமிழ் மற்றும் நிர்வாகிகள் சிலை முன்பு திரண்டனர். பின்னர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக காவி சாயம் பூசப்பட்ட அண்ணா சிலை மீது தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தப்படுத்திய பின்பு சிலைக்கு பூட்டு போடப்பட்டது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“