New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/03/lLfKo7ruRWZtlShqFVGg.jpg)
திருச்சி லால்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியனுக்கு, கே.என்.நேருவுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருவது, செளந்தரபாண்டியனின் முகநூல் பதிவு மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருச்சி மாவட்ட தி.மு.க.வில் பல்வேறு சலசலப்புகள் அவ்வப்போது எழுவது சகஜம். அதிலும் அமைச்சர்களாக இருக்கக்கூடிய கே.என்.நேரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆதரவாளர்கள் இடையே பனிப்போர் நடப்பதும் வழக்கம். இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேரு சொந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சவுந்தரபாண்டியனுக்கும் இடையே முட்டல் மோதல் சமூக ஊடகங்களில் வெட்ட வெளிச்சமாக பகிரப்பட்டு வருகிறது.
திருச்சி லால்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் செளந்தரபாண்டியனுக்கு, கே.என்.நேருவுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வருவது, செளந்தரபாண்டியனின் முகநூல் பதிவு மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு அடித்தளமாக இன்று செளந்தரபாண்டியன் வெளியிட்ட இரு பேஸ்புக் பதிவுகள், அதை உறுதி செய்கின்றன.
செளந்தரபாண்டியனின் முதல் முகநூல் பதிவு
'திருச்சி மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்று யாரும் என்னுடன் பேசக்கூடாது, தொடர்பு கொள்ள கூடாது என்று அதிகாரம் செலுத்தி வந்தவர், இப்போது வெளி மாவட்ட செயலாளர்கள், வெளி மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தில், 'சௌந்தரபாண்டியன் கிட்ட பேசுறியா..' என்றும், இன்னும் ஒரு படி மேலே சென்று அமைச்சர்கள் இடத்தில் கூட.
'உங்களை சௌந்தரபாண்டியன் வந்து பார்த்தானா' என்று விசாரிக்கின்றாராம், முதன்மையானவர், மூத்தவர்! கட்சிக்காரர்கள் இடத்தில் அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு 'சௌந்தரபாண்டியனுக்கு பத்திரிக்கை வச்சியா?' அப்படின்னு விசாரிக்கிறது இதுதான் இப்ப இவருக்கு முக்கியமான வேலைகள்.
நாங்கள் என்ன வேலுமணி, தங்கமணி என்றும் கட்சியையும் முதல்வரையும் விமர்சனம் செய்பவர்கள் உடனுமா தொடர்பில் உள்ளோம். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இப்போது நடந்த தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கூட மாண்புமிகு தலைவர் முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்தியும், எங்கள் மீது வன்மத்தை தினம் தினம் திணிப்பதே இவரின் முக்கியமான பணியாக உள்ளது,' என்று அமைச்சர் கே.என்.நேருவின் பெயர் குறிப்பிடாமல், மறைமுகமாக அவரை சாடி பதிவை வெளியிட்டார்.
இந்த பதிவு, பேஸ்புக் பக்கத்தில் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் அவருடன் பலர் தொடர்பு கொண்ட நிலையில், அதன் பின் என்ன ஆனது என்று தெரியவில்லை, அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார் செளந்தரபாண்டியன். அது இன்னும் உக்கிரமாக இருந்தது.
இரண்டாவதாக மீண்டும் வெளியான சூடான பதிவு...
'நான் ஒரு சுயமரியாதை காரன், நான் யாரையும் நீ ஏன் போய் அவரை பார்த்தாய், நீ ஏன் போய் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாய், என்று இன்றுவரை யாரையும் எப்பொழுதும் கேட்டதில்லை. இன்று புத்தாண்டு வாழ்த்து சொல்ல மூத்தவரை சந்தித்தவர் இடத்தில் மூத்தவர், 'இந்த படத்தை எடுத்து, சௌந்தரபாண்டியனுக்கு அனுப்பு,' அப்படி என்று சொல்கின்றார் என்றால், இதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்,' என்று அந்த பதிவில் செளந்தரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் வெளிப்படையாக திருச்சி தி.மு.க.வின் உட்கட்சி பூசல், வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அதுவும் திமுகவின் முக்கிய அமைச்சர் மீதான இந்த குற்றச்சாட்டை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வே வெளியிட்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.