தமிழக அமைச்சர் பெயரில் நூதன மோசடி: 40 பேரிடம் தலா ரூ42,000 வசூல்
நான்கு பேர் கொண்ட குழு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பெயரில் பேனர் அச்சடித்து கடந்த 2021-ம் ஆண்டு திருச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எலக்ட்ரிஷன், துப்புரவு தொழில், செவிலியர் பணி, கணினி உதவியாளர், கணினி ஆபரேட்டர், தூய்மை பணி கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 40-க்கும் மேற்பட்ட நபர்களிடம் தலா ரூ.42 ஆயிரம் வசூல் செய்து ஏமாற்றிய 2 நபர்கள் குறித்து திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்த ஜோஸ்பின் ஒப்பந்த அடிப்படையில் வேலை முடிந்த பிறகு மீண்டும் பணி கிடைக்க காத்திருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அறிமுகமான நபர்கள் பணம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது.
இதை நம்பிய ஜோஸ்பின் தன்னுடன் பணியாற்றிய 28 நபர்களிடம் தலா 42 ஆயிரம் என மொத்தம் 11,76,000-ம் ரொக்க பணத்தை ஜெயக்குமார் என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் என்பவர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பெயரில் பேனர் அச்சடித்து கடந்த 2021-ம் ஆண்டு திருச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தியுள்ளனர்.
இந்த தேர்வில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பணம் கொடுத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்கள் ஒரு வருட காலம் ஆகியும், சொன்னபடி அரசு வேலை கிடைக்காததால் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டபோது, உங்களுக்கு இன்னும் காலதாமதம் ஆகும் இல்லையென்றால் பணத்தை திருப்பி பெற்றுக் கொள்ளுங்கள் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது..
மேலும் தொடர்ந்து இதுபோன்று ஏமாற்றிய இந்த நபரை நடவடிக்கை எடுக்கக்கூறியும் அவரிடமிருந்து பணத்தை பெற்று தரக்கூறி கும்பகோணம், திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் என பல்வேறு இடங்களில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பாக தமிழக முதல்வர் தனி பிரிவுக்கும் இந்த புகார் மனு அனுப்பப்பட்டது. இந்த புகார் மனு தொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், மருத்துவமனையில் டெம்ப்ரவரி வேலை தான் என்றாலும், குறைந்தது 10 ஆண்டுகள் பணியில் இருக்கலாம் எனச்சொல்லி எங்களிடம் பேசினர். இதனால் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நாங்கள் சிறிய தொகைதானே என கருதி ரூ.42 ஆயிரம் 28 நபர்கள் ஒன்று சேர்ந்து ரூ.11 லட்சத்திற்கும் மேல் கொடுத்தோம். ஓராண்டு ஆகியும் வேலை கிடைக்காததால் பணத்தை திருப்பி கேட்ட பொழுது தங்களை ஆள் வைத்து மிரட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்.
ஏற்கனவே அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தவர்களை நிரந்தரம் செய்வதற்காக தான் இந்த பணம் வழங்கப்படுவதாக கூறி எங்களை ஏமாற்றினார்கள். கடந்த மாதம் நாங்கள் பணம் திருப்பி கேட்டபோது நான் நேரடியாக அமைச்சரை சந்தித்து பணி ஆணை பெற்று வருவதாகவும் அல்லது 8 ஆம் தேதி பணம் திருப்பி தருவதாகவும் கூறியிருந்தனர். ஆனால் இதுவரை பணம் திருப்பி தரவில்லை. நாங்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு கொடுத்த புகார் மீது விசாரணை என்று கூறியதால் நாங்கள் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
திமுக அரசு பொறுப்பேற்ற சில மாதங்களில் இருந்தே தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்களின் பெயரைச்சொல்லி மின்சார வாரியம், இந்து சமய அறநிலையத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட குறிப்பிட்ட சில துறைகளின் பெயர்களில் போலி விளம்பரங்கள் செய்யப்பட்டு பல கோடிகளை கொள்ளையடிக்கும் கும்பல் கிராமம் கிராமமாக சுற்றித்திரிகின்றது. இவர்களிடத்தில் படித்தவர்களும் பணம் கொடுத்து ஏமார்ந்து காவல் நிலையத்திற்கும் வீட்டிற்கும் அலையும் நிலையே தொடர்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“