திருச்சியின் மிகவும் பரபரப்பான பகுதியில் உள்ள சிக்னலில் ரூ.37.50 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வியாபாரிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக 3 வழக்கறிஞர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் கே.டி.எம் என்ற மளிகைக்கடையை நடத்தி வருகின்றார். இந்த மளிகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் கிருஷ்ணகுமார். கடந்த 12-ந்தேதி பகல் 12 மணி அளவில், இவர், கடையில் வசூலான ரூ.37.50 லட்சத்தை வங்கியில் செலுத்துவதற்காக ஒரு பையில் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் காந்தி மார்க்கெட்டில் இருந்து ஜங்ஷன் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது, அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி கிருஷ்ணகுமாரிடம் இருந்த பணத்தை பையுடன் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்த கிருஷ்ணகுமார் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்த வழக்கில் முத்தரசநல்லூரை சேர்ந்த இளையராஜாவின் மனைவி சூர்யா, வரகனேரி பகுதியை சேர்ந்த அன்சாரி, காந்திமார்க்கெட் ஜெயில்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் ஆகியோரை காவல்துறையினர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
நீதிமன்ற காவலில் இருந்த சூர்யாவை காவல்துறையினர் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கொள்ளையர்கள் தங்கள் கொள்ளையடித்த ரூ.37.50 லட்சம் பணத்தை ஒரு பெண் வழக்கறிஞர் உள்பட 3 வழக்கறிஞர்களிடம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை 3 வழக்கறிஞர்களும் நீதிமன்ற வளாக பகுதியில் வைத்து பங்கு போட்டதாகவும், அந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து பெண் வழக்கறிஞர் உள்பட 3 வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் நேற்றிரவு கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி காந்தி மார்க்கெட் மளிகை, ஆயில், வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பாரபட்சம் இன்றி கைது செய்து பணத்தை மீட்டுக் கொடுக்கும்படி வலியுறுத்தி நேற்று இரவு கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த கொள்ளை சம்பவத்தில் 3 வழக்கறிஞர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், பணத்தை பங்கு போட்டது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் கிடைத்ததும் அதில் யார் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என்று பார்த்து அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
அதேநேரம், இந்த சம்பவத்தில் பெண் வழக்கறிஞர் உள்பட மூன்று வழக்கறிஞர்களுக்கும் தொடர்பு இருப்பதும், அவர்கள் பங்கு போட்ட பணத்தை திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் உள்ள ஒருவரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும், வழக்கறிஞர்கள் பணத்தை திருப்பி தந்து விடுகிறோம் வழக்கு பதிய வேண்டாம் என காவல்துறை தரப்பினரிடம் கேட்டுக் கொண்டதால், விசாரணை காவல் நிலையத்திலேயே முற்றுப்பெற்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளியேற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள கண்டோன்மெண்ட் காவல் நிலையம் முன்பு நேற்று இரவு 50-க்கும் மேற்பட்ட காந்தி மார்க்கெட் வியாபாரிகள் ஒன்று திரண்டு முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“