திருச்சி அரசு பொதுமருத்துவமனையில் சிறுவனுக்கு மூச்சுக்குழாயில் சிக்கிய கொலுசு திருகானி அறுவை சிகிச்சையின்றி அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்திருக்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் எருதுபட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுவன், கடந்த 13-ம் தேதி காலை கணுக்கால் கொலுசு திருகானி தனது வாய் வழியாக போட்டுக் கொண்டான். இதனால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் உடனே அவனை இலுப்பூர் மருத்துவமனைக்கு கூட்டி சென்று அங்கு அவனுக்கு எக்ஸ்ரே படங்கள் எடுத்து பார்த்துள்ளனர். இதில் திருகானி சிறுவனின் வலது பெருமூச்சு குழாயில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் மருத்துவர்கள் அந்த சிறுவனை உடனே மேல் சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் எனக்கூறியதை அடுத்து அந்த சிறுவன் திருச்சி அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
பின்னர் திருச்சி கி.ஆ.பெ.அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரும், அரசு பொதுமருத்துவமனை முதல்வருமான ச.குமரவேல், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை துறைத்தலைவா் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியா் அண்ணாமலை, மயக்கவியல்துறை பேராசிரியா் செந்தில்குமார், மோகன் ஆகியோர் கொண்ட குழுவினா், குழந்தைக்கு மயக்கமளித்து, உள்நோக்கி (ரிஜிடு பிராங்கோஸ்கோப்) மூலம் பிரதான மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த கொலுசு திருகானி, ரத்தப்போக்கு, மூச்சு விடுதலில் சிரமமின்றி வெற்றிகரமாக அகற்றினா்.
தற்போது சிறுவன் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தத் திருகானி அங்கேயே விட்டிருந்தால், இன்னும் பல பகுதிகளுக்குச் சென்று தொற்றை ஏற்படுத்தியிருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், வீட்டிலோ, பிற இடங்களிலோ சிறு பொருட்களை தரையிலோ, விளையாட்டுக்கோ கொடுக்கும் நிலையில் குழந்தைகள் விளையாட்டு நினைப்பில் அதனை எடுத்து வாயிலோ, மூக்கிலோ வைத்துக்கொண்டு விளையாடினால், விளையாட்டு வினையாகிவிடும். அது உயிருக்கே ஆபத்தாகிவிடும். எனவே, இது போன்ற போருட்களை குழந்தைகள் அருகே இல்லாமலும், குழந்தைகள் விளையாடும் பகுதிகளை, தரைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே உணவு உண்பதை தவிர்ப்பது, படுத்துக் கொண்டே உணவு உண்பதை தவிர்ப்பது, படித்துக்கொண்டே நொறுக்குத்தீனி திண்பது போன்றவற்றில் குழந்தைகள் ஈடுபடுமாயின் அவர்களுக்கு தெரியாமலேயே உணவோடு, ஆபத்தும் அவர்களைச்சென்றடையும். ஆகையால் குழந்தைகள் இருக்கும் இடங்களில் சிறுகுறு பொருட்களை வைத்துவிட்டு செல்வதும், கண்காணிக்காமல் விடுவதும் அவர்களது உயிருக்கு ஆபத்தாக முடிய வாய்ப்பு என்றனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.