/indian-express-tamil/media/media_files/vnkJJFH9g8QibP8Dqolz.jpg)
திருச்சி அரசு மருத்துவமனை
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் நோயாளிகள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள படுக்கைகள் நிரம்பியதை அடுத்து புதிதாக வரும் நோயாளிகள் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் விட்டுவிட்டு பெய்யும் மழை காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.கடந்த 3 நாட்களாக திருச்சி மாவட்டத்தில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ஒரு சிறுவன், கர்ப்பிணி உட்பட 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் இதை உறுதிப்படுத்த மறுத்து விட்டனர். இதற்கிடையே திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு வார்டில் உள்ள 60 படுக்கைகளும் நிரம்பியுள்ளன.
போதிய படுக்கை வசதியில்லாததால் ஏற்கெனவே சிகிச்சை பெறுபவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி செல்லும் வரை புதிதாக வரும் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் வரும்போது, ஏற்கெனவே சிகிச்சை பெற்று வருபவர்களை தரையில் படுக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே டெங்கு காய்ச்சல் அதிகரிப்பால் தனி வார்டில் படுக்கைகள் நிரம்பி, காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வருபவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளிகளிடம் விசாரித்த போது, நாளுக்கு நாள் டெங்கு நோயாளிகளின் வரவு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. பணம் படைத்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். தனியார் மருத்துவமனையில் சுமார் 50 லிருந்து 70 ஆயிரம் வரை செலவு பிடிப்பதால் நாங்கள் அரசு மருத்துவமனையை நாடி வந்திருக்கிறோம்.
இங்கு 50 பேர் படுக்கக் கூடிய படுக்கைகள் மட்டுமே இருப்பதால் அதற்கு மேற்கொண்டு வரும் புற நோயாளிகள் மருந்து மாத்திரைகள் கொடுத்து அனுப்பப்படுகின்றனர். ஆகவே, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெரும் பகுதியில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும், அதேபோல் மருத்துவர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இது குறித்து திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் நேருவை தொடர்புகொண்டு கேட்டபோது,
திருச்சி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவமனையில் திறம்பட டெங்கு நோயாளிகளை மருத்துவர்கள் கையாளுகின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு என தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளில் தலா ஒரு முதுநிலை மருத்துவர், 2 முதுநிலை பயிற்சி மருத்துவர்கள், 2 செவிலியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, பெரியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என மொத்தம் 50 பேர் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொடர் சிகிச்சை உறுதி செய்யப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் நோயாளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கேற்ப படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.