திருச்சி மாவட்டம் லால்குடி அருகே டி.கல்விக்குடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் சரவணன். அதே கிராமத்தில் கிராம நிர்வாக உதவியாளராக கோகிலா என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருமே நத்தமாங்குடி கிராமத்திற்கும் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் சரவணனை நத்தமாங்குடி பகுதியைச் சேர்ந்த எழிலழகன் என்பவர் நேரில் சந்தித்து வீட்டிற்கு மின்சாரம் இணைப்பு பெறுவதற்காக சான்றிதழ் கேட்டுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் கலைஞரின் அனைத்து மகளிர் உதவி திட்டத்தில் பணியில் இருந்ததால் 10 நாட்களுக்குப் பிறகு வருமாறு அவரிடம் கூறி இருக்கிறார்.
ஆனால் அதன்பிறகு விஏஓ சரவணன் நத்தமாங்குடிக்கு செல்லாத நிலையில் எழிலகன் சான்றிதழ் வாங்குவதற்காக கல்விக்குடியில் உள்ள விஏஓ அலுவலகத்திற்கு நேரில் வந்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சரவணன் இன்னும் 2 அல்லது 3 நாட்கள் கழித்து வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எழிலகன் திடீரென கிராம நிர்வாக அலுவலர் சரவணனை கடுமையாக தாக்கி உள்ளார்.
இந்த தாக்குதலை தடுக்கச் சென்ற அவரது உதவியாளர் கோகிலாவையும் அவர் கடுமையாக தாக்கி உள்ளார். இதனால் விஏஓ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்ப்டு மக்கள் கூட்டம் கூடியதை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய வாலிபர் எழிலழகன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இந்த தாக்குதலில் காயம் அடைந்த இருவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதில் தாக்குதல் நடத்திய எழிலகனை வலைவீசி தேடி வருகின்றனர். மின் இணைப்பு வழங்க சான்றிதழ்க்கு காலம் தாழ்த்திய கிராம நிர்வாக அலுவலரை வாலிபர் தாக்கிய சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
க. சண்முகவடிவேல்