scorecardresearch

மணப்பாறை அருகே பள்ளியை தரம் உயர்த்தக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பள்ளியை தரம் உயர்த்த கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை பரிசீலனையில் தான் உள்ளது என்று கூறி காலம் கடத்திக் கொண்டே தான் உள்ளனர்.

Manapari
மணப்பாறை பள்ளி

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 138 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திட வேண்டும் என்று மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை.

மேலும், பள்ளிக்காக கிராம மக்கள் சார்பில் இடம் வாங்கி உள்ளதுடன் பள்ளியை தரம் உயர்த்தினால் அதற்கான அனைத்து தளவாட பொருட்களும் கிராம மக்கள் சார்பில் வழங்கி விடுகிறோம் என்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அனுப்பி உள்ளனர். ஆனால் இதுவரை பரிசீலனையில் தான் உள்ளது என்று கூறி காலம் கடத்திக் கொண்டே தான் உள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளி அருகே இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை காவல்துறை ஆய்வாளர் கோபி மற்றும் தாசில்தார் தனலெட்சுமி, உதவி தொடக்ககல்வி அலுவலர் ஜெகநாதன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அவர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு வகிக்கும் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு இந்த நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu trichy manapari people protest for upgrade school