மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார் மாநகராட்சி மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு விடுத்துள்ள கோரிக்கையில், திருச்சி மாம்பழச்சாலையில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் பேருந்து வழி தடத்தில் மாம்பழச்சாலையில் பேருந்து நிறுத்தம் இல்லை என்பது வெகுநாட்களாகவே குறையாக உள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் எங்கே பேருந்து நிற்கும் என தெரியாமல் மாம்பழச்சாலை சிக்னலிலும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரிலுள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பாக என மாறி, மாறி பேருந்து எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் ஏறி இறங்கி வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு பெருத்த சிரமம் ஏற்படுவதோடு, இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், வெளியூர் பக்தர்கள் என பல்வேறு தரப்பினரும் தினம், தினம் வெகுவாக பாதிக்கப்படுகிறார்கள்.
மேலும் விபத்து ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே, திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மற்றும் திருச்சி மாநகராட்சி தனது தொகுதி பொது நிவாரண நிதியில் மாம்பழச்சாலை பகுதியில் பேருந்து நிறுத்துமிடம் உடனடியாக ஏற்படுத்தி தர மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். மேற்கண்டவாறு மக்கள் நீதி மய்யம் கட்சி, திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார் மாநகராட்சி மற்றும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்க்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்