மத்திய அரசு 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து அதை ஜூலை 1-ம் தேதியிலிருந்து அமல்படுத்தியுள்ளது. இந்த மூன்று சட்ட திருத்தங்கள் நீதித்துறையில் அதிகாரத்தை முழுவதுமாக பறிப்பதாக உள்ளது, மீண்டும் பிரிட்டன் காலணி ஆதிக்கத்திற்கு வழிவகுப்பதாக உள்ளது என்று குற்றம் சாட்டி, தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டம், மத்திய அரசு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில், இன்று திருச்சியில் மிகப்பிரமாண்டமான பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். திருச்சிராப்பள்ளி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து 3000-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எம்.ஜி.ஆர் சிலை முன்பு துவங்கிய பேரணி அங்கிருந்து தென்னூர் உழவர் சந்தை வரை நீண்டது. இறுதியில் உழவர் சந்தை மைதானத்தில் கூட்டம் நடத்தப்பட்டு இந்த மூன்று சட்டங்களின் தீமைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. வழக்கறிஞர்களின் பேரணி காரணமாக அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்திற்கு திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். திருச்சி வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் மதியழகன், செயலாளர் சுகுமார். இணைச் செயலாளர்கள் அப்துல் சலாம், சந்தோஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். ஜாக் சேர்மன் நந்தகுமார் சிறப்புரையாற்றினார். முடிவில் ஜாக் பொருளாளர் நன்றி கூறினார் .
/indian-express-tamil/media/media_files/durai-vaiko.jpg)
இந்த போராட்டத்தில் பார் கவுன்சில் உறுப்பினர் ராஜேந்திர குமார், செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர்கள் சுதர்சன், முத்துமாரி, செந்தில். வினிஷ், ராஜலட்சுமி ,சாந்தி, கங்காதரன், மூத்த வழக்கறிஞர்கள் மார்ட்டின், கணேசன். கனகசபை, முத்துகிருஷ்ணன், விக்டர் வீராசாமி, மதானி, வீரமணி, மகேந்திரன், குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் பி.வி.வெங்கட், பொருளாளர் கிஷோர் குமார், துணை செயலாளர் சசிகுமார், துணைத்தலைவர் பிரபு, செயற்குழு உறுப்பினர் வக்கீல் பொன் முருகேசன், வழக்கறிஞர்கள் சரவணன், சிக்கல் சண்முகம், வெங்கடேசன், ஜெயராமன், வடிவேல் சாமி, மணிவண்ண பாரதி,அண்ணாதுரை, மகேஸ்வரி வையாபுரி,பெண் வழக்கறிஞர்கள் சங்கதலைவர் ஜெயந்தி, உள்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்கீல்கள் திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் இருந்து திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த பேரணிக்கு திருச்சி எம்.பி. துரை வைகோ நேரில் ஆதரவு தெரிவித்தார். மூன்று குற்றவியல் சட்டங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடாது. சட்ட நிபுணர்கள், எதிர்க்கட்சி எம்பிக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு ஒரு குழு அமைத்து அந்த சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மூன்று குற்றவியல் சட்டங்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானது என துரை வைகோ எம் பி தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“