/indian-express-tamil/media/media_files/2025/06/21/durai-vaiko-2025-06-21-22-15-49.jpg)
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் மதிமுக போட்டியிட விரும்புவதாக தெரிவித்தார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் 8 ஆண்டுகளாக உறுதியாக இருந்து வரும் மதிமுக, கட்சியின் அங்கீகாரத்தை மேலும் வலுப்படுத்த, 12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என தொண்டர்களும், நிர்வாகிகளும் ஆசைப்படுகின்றனர். மதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் 12 தொகுதிகளில் போட்டியிட்டால், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்கின்றனர்.
கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட எல்லோருக்கும் இருப்பதை போல் எங்களுக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆனால் ஒரு முதன்மைச் செயலாளராக எத்தனை சீட்டுகள் வேண்டும் என எதிர்பார்ப்பது ஒரு முதிர்ச்சியான பதிலாக இருக்காது.
நான் சொல்லவும் கூடாது. இயக்கத்தின் தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். எங்கள் விருப்பத்தை தலைமையிடம் சொல்வோம். ஆனால் பத்திரிகையாளர்களை சந்தித்து சொல்ல முடியாது. மற்ற இயக்கங்களில் அப்படி நடக்கலாம். மதிமுக என்பது கட்டுப்பாடுடைய ஒரு இயக்கம். தலைமை சொல்வது படி இயங்கும் ஒரு இயக்கம். பொதுக்குழு நடக்கும் பொழுது எங்களுடைய கருத்துக்களை தலைமையிடம் சொல்வோம். திமுக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதால், தொகுதி பங்கீட்டில் நெருக்கடி இருக்கும், ஆனால் மதவாதத்தை எதிர்க்கும் பொது நோக்கத்திற்கு பாதகம் வராமல் சமரசம் ஏற்படும்.
இந்தக் கருத்துகள், மதிமுகவின் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், திமுகவுடனான நீண்டகால கூட்டணியை வலியுறுத்தி, "8 ஆண்டுகளாக திமுக தலைமையில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் இணைந்து, மதவாதத்தை எதிர்த்து ஒரணியில் திரண்டுள்ளோம். இந்த ஒற்றுமை, தமிழ்நாட்டின் அரசியல் நிலையில் முக்கிய பங்காற்றும். அரசியலில் மதத்தை கலப்பதை தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள். ஜாதி, மதத்தை கடந்து தான் அரசியலில் சிந்திக்க வேண்டும். ஆளுநர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
ஆர்.என்.ரவி பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் - ன் பிரச்சாகராக தான் செயல்படுகிறார். 3-வது மொழி படிக்க வேண்டும் எனக் கூறும் பாஜகவினர் ஆங்கிலம் கற்றுக்கொள்ள கூடாது என மட்டும் ஏன் கூறுகிறார்கள். ஆங்கிலம் இல்லாத இந்தியா என அமித்ஷா கூறுவது பிற்போகத்தனமானது. மேலும், திருச்சி தொகுதியில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தீப்பெட்டி சின்னத்தில் வெற்றி பெற்ற துரை வைகோவாகிய நான், தொகுதி மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அமைச்சர்களைச் சந்தித்து தொடர்ந்து பணியாற்றி வருகிறேன் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் ரொஹையா, மணவை தமிழ் மாணிக்கம், சோமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.