திருச்சி மாவட்டம் சிறுகமணி பேரூராட்சிக்கு உட்பட்டது பெட்டவாய்த்தலை. இந்த ஊரில் கடந்த 1964-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமையான பாலம் தற்போது வரை பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பெட்டவாய்த்தலை அய்யன்வாய்க்காலில் அண்ணாநகர் பகுதிக்கு செல்லும் வகையில் இந்த பாலம் கட்டப்பட்டு இருந்தது.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் அமைந்திருந்த இந்த பழமையான பாலத்தை புதுப்பித்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.. இதற்கிடையே பெட்டவாய்த்தலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று அதிகப்படியான மணல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி அந்த பாலத்தை கடந்து சென்றுக் கொண்டிருந்தது. லாரியின் முன்பகுதி பாலத்தை கடந்த நிலையில் பின்பகுதி பாரம் தாங்காமல் பாலத்தின் நடுப்பகுதி இரண்டாக உடைந்ததில் லாரி சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் தொங்கியது. உடனடியாக அப்பகுதியினர் அங்கு திரண்டு வந்து கயிறு கட்டி இழுத்தும் உடனடியாக லாரியை மீட்க முடியவில்லை.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சிறுகமணி பேரூராட்சி தலைவர் சிவகாமசுந்தரி மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் விரைந்து வந்து லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பழமையான பாலம் இரண்டாக உடைந்ததால் பொதுமக்கள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பெரும் போராட்டத்திற்கு பின் லாரியை மீட்ட அந்த பகுதி மக்கள் உடைந்த பாலத்தில் உடனடியாக குழாய்கள் பதித்து தற்காலிகமாக பாலம் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கும் என்றும், விரைவில் பெட்டவாய்த்தலையில் புதிய பாலம் கட்டுவதற்கான முயற்சிகள் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் பேரூராட்சி தலைவர் சிவகாமசுந்தரி மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil