திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள டாக்டர் வருண் குமார் தான் பொறுப்பெற்ற அன்றைய தினத்தில் இருந்து பொதுமக்களை சந்திப்பது அவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பது மற்றும் புகாருக்கென தனி அலைபேசி எண்ணை அறிவித்தது என பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து தமது துறையின் கீழ் இருந்த அதிகாரிகளுக்கும் கடிவாளம் போட்டார்.
அந்த வகையில், முதல்வரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அலுவலகங்களில் பெறப்பெற்ற 44 மனுக்களை காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வருண் குமார், தலைமையில், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் முன்னிலையில் மேற்படி, மனுதாரர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு நேரடியாக விசாரணை மேற்கொண்டு 38 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் புகார் தெரிவிக்க தனி தொலைபேசி, 9487464651 எண்ணில் 24 மணி நேரமும் புகார் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ. வருண் குமார் தெரிவித்திருந்தார்.
இதனிடையே மேற்படி எண்ணுக்கு பொதுமக்கள் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில், புலிவலம் காவல் நிலையம்- பகலவாடி பகுதியில் வயல்காட்டில் கள்ளச்சாராய ஊரல் போட்டு அவ்வப்போது சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த லோகநாதன் என்பவரது இடத்தை சிறப்பு படையினருடன் நேரில் வந்து ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் வருண் குமார், அங்கு வயல் காட்டில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த சாராய ஊரல் சுமார் 1150 லிட்டர் மற்றும் ஊரலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆறு பேரல்களை கண்டுபிடித்தார்.
மேலும் சிறிதளவு காய்ச்சிய கள்ளசாராயம் கண்டுபிடிக்கப்பட்டு அது அழிக்கப்பட்டது. மேற்படி, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த லோகநாதன் என்பவரை தனிப்படையினர் கைது செய்தனர். பொதுமக்கள் புகார்களுக்கு பிரத்தியோக செல் நம்பரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்த மூன்று நாட்களுக்குள் சுமார் 1200 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“