திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கோபால கிருஷ்ணன். இவர் சொந்தமாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நவல்பட்டு கிராமத்தில் இருந்த காலி மனையை கார்த்திகேயன் என்பவருக்கு விற்பதாக இன்று (01.03.2024) திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்வதாக முடிவு செய்துள்ளார்கள்.
இது தொடர்பாக கோபால கிருஷ்ணன் கடந்த 27 ஆம் தேதி (27.02.2024) திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்று சார்பதிவாளர் சபரிராஜன் என்பவரை அணுகி பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு ஒரு பத்திரத்திற்கு பத்தாயிரம் வீதம் இரண்டு பத்திரத்திற்கும் ரூ.20 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாக சபரிராஜன் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கோபாலகிருஷ்ணன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி மற்றும் குழுவினருடன் இன்று மாலை 5 மணியளவில் பத்திரப்பதிவு முடிந்தவுடன் கோபாலகிருஷ்ணன் வசம் இருந்து சார்பதிவாளர் சபரிராஜன் தனிநபர் சூர்யா என்பவரின் மூலம் லஞ்ச பணத்தை பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக திருவெறும்பூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாஸ்கர் என்பவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த சூழலில் இன்று சார் பதிவாளர் சபரிராஜன் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டது திருவெறும்பூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“