/tamil-ie/media/media_files/uploads/2022/06/refugee.jpg)
திருச்சி மத்தியசிறை வளாகத்திலுள்ள அகதிகள் சிறப்பு முகாமில் வெளிநாட்டிலிருந்து முறையாக விசா மூலம் இந்தியாவுக்குள் வராமல் நேரடியாக வந்தவர்கள், காலாவதியான பாஸ்போர்ட் உள்ளவர்கள் என 84 இலங்கை தமிழர்கள் உட்பட பல்கேரியா, சூடான், நைஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 110 பேர் திருச்சி அகதிகள் முகாமில் தமிழக அரசால் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதில் இலங்கை அகதிகள் பலர் தங்கள் தண்டனைக் காலம் முடிந்தும் சட்ட விரோதமாக தங்களை அடைத்து வைத்திருப்பதாகவும், தங்களை உடனடியாக விடுதலைச் செய்து, தங்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வலியுறுத்தியும் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் இருப்பதாக கூறி மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தால் பலவீனம் மற்றும் சுகவீனம் அடையும்போது அவர்களை போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து தங்கள் போராட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அவர்கள் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை இலங்கைத் தமிழர்கள் நான்கு பேர் மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விசா முடிந்து தற்போது சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள உமா ரமணன் என்பவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு பற்ற வைத்துக் கொண்டார்.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து அவரை காப்பாற்றினார்கள். தீக்காயமடைந்த உமா ரமணன் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.