திருச்சி ஸ்ரீரங்கம் மூலத் தோப்பைச் சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் அன்பரசன் (32). இவர் பிரபல ரவுடி திலீப் என்பவரின் வலதுகரமாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் மீது அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் மேலூர் செல்லும் வழியில் உள்ள சாலை ரோட்டில் அன்பரசன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அன்பரசுவை ஓட ஓட, விரட்டி விரட்டி வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். சம்பவ இடத்தில் உயிருக்கு போராடிய அவரை, அவரது நண்பர்கள், உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல் தற்போது ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்புவின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த கொலை சம்பவத்தை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்தும், கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில்,ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி வேடுபறி திருவிழாவில் அன்பு முறை வாங்குவதில் ஏற்பட்ட தகராறு என்றும், சமுதாய ரீதியில் போஸ்டர் அடித்ததில் இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்தப் பகை கொலையில் முடிந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த கொலை வழக்கில் ஈடுபட்ட 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். காலை நேரத்தில் பொதுமக்கள் அதிகம் புழங்கி வரும் சாலையில் வாலிபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்