தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. இந்த மாதம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது சான்றோர்களின் வாக்கு. சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/sUmCMcs12s0LJ44aSMug.jpg)
அந்த வகையில், கடந்த 18ஆம் தேதி புரட்டாசி மாதம் தொடங்கி நிலையில் இன்று முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான, 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் காலை முதலே திருச்சி உள்பட தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
சாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் அனைவரும் கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க, இலவச தரிசனம் மற்றும் 100 ரூபாய் கட்டண தரிசனம் மூலம் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். புரட்டாசி சனிக்கிழமை நாட்களில் மட்டும் பெருமாளை தரிசனம் செய்வதற்கான நேரங்கள் திருக்கோவில் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
/indian-express-tamil/media/media_files/nwTRllaeFuKQpwoeAU5v.jpg)
அதன்படி மூலவர் பெரிய பெருமாளை காலை 6. 30 மணி முதல் மதியம் 12. 30 மணி வரையும், மதியம் 2. 30 மணி முதல் மாலை 5. 30 மணி வரை தரிசனம் செய்யலாம். தொடர்ந்து, மீண்டும் 6:30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரவு 09.00 மணிக்கு மேல் ஆர்யபடாள் வாயிலுக்குள் அனுமதி இல்லை .
முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு 2022-23 அறிவிப்பு எண் 29 இன் படி பிரசித்தி பெற்ற வைணவத் தலங்களுக்கு சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்த ஆன்மீகச் சுற்றுப் பயணம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சுமார் 18 பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு ஆன்மீக சுற்றுப் பயணம் வந்தனர். அவர்கள் பெருமாளை சேவித்த பிறகு திருக்கோயில் சார்பாக அனைவருக்கும் பிரசாத் பைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“