108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் அமைந்துள்ள பகுதி திருச்சி ஸ்ரீரங்கம். இங்கிருக்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. உலகளவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கத்தில் உள்ள ரயில் நிறுத்தத்தில் பெரும்பான்மையான விரைவு ரயில்கள் நின்று சென்றாலும், அன்றாடம் மதுரையையும், சென்னையையும் இணைக்கக்கூடிய வைகை விரைவு ரயில் விழாக்காலங்கள் தவிர பிற நாட்களில் நிறுத்தம் இல்லாமல் கடந்து செல்கிறது.
இதன் காரணமாக வைகை விரைவு ரயிலை ஸ்ரீரங்கத்தில் நிறுத்திச்செல்ல பல வருடங்களாக அப்பகுதியினரும், ஆன்மிக அன்பர்களும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சென்னை - மதுரை- வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை தினமும் காலை - மாலை நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்திரவிட்டது.
அதன்படி இன்று (16.09.2023) ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் மதுரையில் இருந்து சென்ற வைகை ரயில் நின்று சென்றது. இந்த வைகை ரயிலுக்கு ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் சார்பாக சமூக ஆர்வலர்கள், அனைத்து தேசிய, மாநில கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக சென்று வரவேற்பளித்து, இனிப்புகளை வழங்கி ரயில் ஓட்டுநர்களுக்கும், ஸ்ரீரங்கம் ரயில் நிலைய அதிகாரிகளுக்கும் சால்வை அணிவித்து நன்றிகளை தெரிவித்து, தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
இதற்காக பாடுபட்ட அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கும் ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வைகை விரைவு வண்டி 3-வது நடைமேடையில் நின்று செல்வதால், ஸ்ரீரங்கத்தில் இருந்து சென்னை செல்லும் முதியவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே, பல்லவன் உள்ளிட்ட விரைவு ரயில்கள் நின்று செல்லும் நடைமேடை 1-ல், வைகை விரைவு ரயிலும் நின்றுச்செல்ல ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.
ஸ்ரீரங்கம் மக்களின் பெரும் கோரிக்கைகளில் ஒன்றான வைகை விரைவு ரயில் இன்று முதல் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று சென்றதால் மதுரையில் இருந்து திருச்சி வந்து ஸ்ரீரங்கத்திற்கு பேருந்தில் வந்த பயணிகள் இன்று முதல் நேரிடையாகவே ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இறங்கி ரெங்கநாதரை வழிபட சென்றனர் என்பதும், அதேபோல் சென்னையில் இருந்து திருச்சி வரும் பக்தர்களும், ஸ்ரீரங்கம் பொதுமக்களும் இன்று முதல் ஸ்ரீரங்கத்திலேயே இறங்கிச்செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.