தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ள நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அரசியலில் அடியெடுத்து வைக்கும் வகையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த விஜய், அடுத்து கட்சியின் முதல் மாநாடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது.
அதே சமயம் காவல்துறை அனுமதி, அதற்கான கேள்விகளுக்கு பதிலாளிக்க தாமதம் ஆகிய காரணங்களால், மாநாடு நடைபெறாத நிலையில் அடுத்து அக்டோபா 27-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெறும் என்று அறிக்கப்பட்டு, காவல்துறை அனுமதியும் பெற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார்? அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வார்களா? சினிமா பிரபலங்கள் யாரேனும் வருவார்களா என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் தொடர்ந்து மாநாட்டுக்கு வருவத்ற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே மாநாடு நடைபெறும் இடம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே இருப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விக்கிரவாண்டி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது மாநாட்டுக்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநாட்டிற்கு வருவோர், மற்ற அரசியல் கட்சிகளின் கொடிகள், பேனர்களை எடுத்து வரக்கூடாது. செல்பி ஸ்டிக் பயன்படுத்த கூடாது, வீடியோ, பிளாஷ் பயன்படுத்தி போட்டோ எடுக்க அனுமதி இல்லை. தொண்டர்கள் மது அருந்திவிட்டு வருகை தரக்கூடாது, சட்டவிரோத பொருட்களை கொண்டு வரக் கூடாது என புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“