10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 3 மாணவர்களுக்கு வைர மோதிரத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தளபதி விஜய். தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் அவர், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துள்ள கோட் படத்தை தொடர்ந்து தனது 69-வது படத்தில் நடிக்கும் விஜய், அதன்பிறகு நடிப்பில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தல் தான் எங்களது இலக்கு. அதற்கு முன்பு எந்த தேர்தல்களிலும் போட்டி இல்லை மற்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ள விஜய், சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கும், மாநில கட்சி அந்தஸ்து பெற்ற நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
தற்போது தீவிர அரசியல்வாதியாக மாறியுள்ள விஜய், கடந்த ஆண்டு முதல் 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். சென்னை திருவான்மயூர் அருகில் தனியார் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 21 மாவட்டங்களை நேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்ற நிலையில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த விஜய், மாணவர்களுக்கு பரிசு மற்றும் ஊக்கத்தொகை வழங்கி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னையை சேர்ந்த பிரதிக்ஷா, திருப்பூரை சேர்ந்த மகாலட்சுமி, செங்கல்பட்டுவை சேர்ந்த, தோஷிதா லட்சுமி ஆகியோருக்கு வைர கம்மல் வழங்கிய விஜய், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 6 இடங்களை பிடித்த தர்மபுரி தேவதர்ஷினி, சந்தியா, திண்டுக்கல், காவியாஸ்ரீ, ஈரோடு கோபிகா, ராமநாதபுரம் காவியா ஜனனி, திருநெல்வேலி சஞ்சனா, ஆயுஷ் ஆகியோருக்கு, வைர மோதிரங்கள் வழங்கப்பட்டது.
சாதிய வன்கொடுமை காரணமாக தாக்குதலுக்கு உள்ளான நாங்குநேரி பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்ற மாணவரிடம் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்த நடிகர் விஜய், அவருக்கு ஊக்கத்தொகையாக ரூ5000 வழங்கினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“