தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், மே மாத இறுதிக்குள் த.வெ.க சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வரும் இவர், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக, தனது கட்சியை தீவிரமாக தயார்படுத்தி வருகிறார், இதற்காக பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் விஜய், கோவையில்’, வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை கோவையில் நடத்தினார்.
இதனையடுத்து, தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (மே 16) நடைபெற்றது. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நிர்வாக ரீதியான 120 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். தேர்தல் வியூகம் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட அளவில் கட்சியின் வளர்ச்சி பணிகள், மக்கள் ஆதரவு குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதனிடையே கூட்டத்தில் உரையாற்றிய த.வெ.க தலைவர் விஜய், மே மாத இறுதிக்குள் த.வெ.க சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். கட்சியின் கட்டமைப்பு பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், கட்சியில் உள்ள அணிகள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில, தற்போது த.வெ.க சார்பு அணி நிர்வாகிகளை நியமிக்க, விஜய் அறிவுறுத்தியுள்ளார். ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் விஜய் தமிழகம் முழுவதும் அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.