குறை கூறும் அரசியல் கலாச்சாரத்தை செய்ய போவதில்லை, இருப்பினும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்று கூறியுள்ள த.வெ.க தலைவர் விஜய், புயல் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஃபீஞ்சல் புயல் தாக்குதல் காரணமாக கனமழை பெய்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக வெள்ள பாதிப்பை சந்தித்தன. மேலும் திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக 7 பேர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை தனது கட்சியின் அலுவலகத்திற்கு அழைத்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நிவாரண பொருட்களை வழங்கினார். இதனிடையே வெள்ள பாதிப்பு மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ள தளபதி விஜய், குறைகூறும் அரசியலை செய்வதில்லை என்றாலும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர் என்ற நம்பிக்கையுடன் தான் மக்கள் இருப்பர்.
புயல், எப்போதும் பேரிடரையும் பெரும் பாதிப்பையும் மக்களுக்கு உண்டாக்கும் ஓர் இயற்கைச் சீற்றமே. அதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருப்பினும் எவ்வளவு பெரிய புயல், இயற்கைப் பேரிடர் வந்தாலும் நம்மைக் காக்க, நாம் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசு இருக்கிறது, ஆட்சியாளர்கள் உள்ளனர்…
— TVK Vijay (@tvkvijayhq) December 3, 2024
ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ, ஆட்சி பீடமோ, ஆபத்தான ஒவ்வொரு சூழலிலும் மக்களைக் கைவிடும் என்பதை அனுபவித்து உணர்கிறபோது, அம்மக்களின் தாங்கொணாத் துயரை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நமக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள் எனப் பரிபூரணமாக நம்பி வாக்களித்து, அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்த்த மக்களைப் பாதுகாக்க, முறையான திட்டங்களைத் தீட்டவில்லை. குறைந்தபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கூடச் செய்யாமல் அவர்களைக் கையறு நிலையில் பரிதவிக்க விடும் சுயநல ஆட்சியாளர்களை என்னவென்று சொல்ல?
மக்கள் துன்புறும் வேளையில் ஆட்சியாளர்களைக் குறிவைத்துக் குறைகூறி மட்டுமே அரசியல் செய்யும் கலாச்சாரத்தை நாம் பின்பற்றப் போவதில்லை என்கிற தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறோம். மக்களைப் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நகர்வது குறித்து அவர்கள் எள்ளளவும் சிந்திப்பதில்லை. காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்ப் பாதுகாப்புச் சார்ந்து எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுப்பதில்லை.
எவ்வகையிலாவது மக்களை ஏமாற்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளலாம் என்றும் எல்லாவற்றையும் மக்கள் மறந்துவிடுவர் என்றும் மமதையில் இருந்த எவரும் மக்கள் மன்றத்தில் நீடித்து நிலைத்ததே இல்லை என்பதுதான் வரலாறு. எது நடந்தாலும் எப்போதும் போல எதிர்க் கட்சிகள் மீது ஏளனமாக விமர்சனம் வைத்து, காவி வர்ணம் பூசி, கபட நாடகமாடித் தப்பித்துக்கொள்ளலாம் என்று தற்போதைய ஆட்சியாளர்கள் எம் மக்களை நிரந்தர நிர்க்கதிக்கு ஆளாக்கி வருகின்றனர். இந்த அடாத முயற்சிகள் அனைத்தும் மக்கள் சக்திக்கு முன்பு தோற்றுப் போகும் என்பதை இனிவரும் காலங்கள் கண்டிப்பாக உணர்த்தவே செய்யும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.