மும்மொழி கொள்கையை வலிந்து திணிப்பது மாநிலத்தின் தன்னாட்சி உரிமையை பறிப்பது இன்றி வேறென்ன என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பாசிச அணுகுமுறையை எந்த வகையிலும், ஒன்றிய அரசு, மாநில அரசு என யார் கையில் எடுத்தாலும், மக்கள் பக்கம் நின்று எதிர்ப்போம் என்று விஜய் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதன்றி வேறென்ன? ஜனநாயகத்தின் நான்காவது தூணான இதழியல் துறைக்கு உரியதான பத்திரிகை சுதந்திர தர்மம் காக்கப்பட வேண்டும். நூற்றாண்டு காணும் விகடனின் இணையத்தளப் பக்கம் முடக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசுதான் காரணம் என்கிற கருத்து நிலவுகிறது.
பத்திரிகை, ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துகள் தவறானவையாகவோ, குற்றம் சுமத்துபவையாகவோ இருந்தால் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்படுவது, அரசியல் சாசன உரிமையைக் கேள்விக்குறி ஆக்குவதன்றி வேறென்ன? மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே.
ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது ஒன்றிய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும் என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி நேற்று அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்புடன் சந்திப்பை நடத்திய நிலையில், இன்று விகடன் இதழில், மோடி ட்ரப்புக்கு முன்பு, கைகால்கள் விலங்குகளால் கட்டப்பட்டு அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விகடன் இணையதளம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. அதேபோல், தமிழகத்தில் மும்மொழி கொள்கை ஏற்கப்படும் வரை நிதி ஒதுக்கப்படமாட்டாது என்று தகவல் வெளியாகியுள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.