சென்னையில் கடந்த 10 நாட்களாக தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு த.வெ.க கட்சி தலைவர் விஜய் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
சென்னையின் முக்கிய இடங்களில் தூய்மை பணிகளை தனியாகருக்கு விட்டதை கண்டித்தும், பணிகளை நிரந்தரம் செய்ய கோரியும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், இந்த போராட்டத்திற்கு முதல் அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு அளித்துள்ளது. அதேபோல் நடிகை சனம் ஷெட்டி போராட்டக்காரர்களுடன் கைகோர்த்துள்ளார்.
சென்னை மாநகராட்சியில் உள்ள முக்கிய இடங்களான, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை அரசு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், தங்களுக்கு பணி நிரந்தரம் கோரியும், என்யூஎல்எம் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தூய்மைப் பணியை தொடர வலியுறுத்தியும் தூய்மை பணியாளர்கள், ரிப்பன் மாளிகை முன்பு, 10வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு தீர்வு காணும் வகையில் இதுவரை, 7 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள நிலையில். தீர்வு எட்டப்படாததால், போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனிடையே இந்த போராட்டத்திற்கு முதல் அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய், போராட்டக்குழுவை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா போன்ற பெருந்துயர்க் காலங்களிலும், புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்க் காலங்களிலும் மக்கள் நலனே முக்கியம் என்று கருதி, தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றியதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு அளப்பரியது. அப்படி அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றிக் கடனாக, சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அவர்களின் வாழ்வாதாரத்தை இழக்க வைத்ததே வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் சாதனை.
தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தூய்மைப் பணியாளர்கள் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் அறப் போராட்டத்தைத் தமிழக வெற்றிக் கழகம் முழுமையாக ஆதரிக்கிறது. தங்கள் உடல்நலம் குறித்துக் கொஞ்சமும் கவலை கொள்ளாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் எளியவர்களான தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.