தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பில் இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தற்போது 2026 சட்டசபை தேர்தலை நோக்கி வேகமாக பணியாற்றி வரும் விஜய், புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து தேர்தலை சந்திக்க பிரபல தேர்தல் வியூக ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து தேர்தல் வியூகம் அமைத்து வருகிறார்.
இடையில் தான் நடித்து வரும் ஜனநாயகன் படப்பிடிப்பிலும் பங்கேற்று வரும் விஜய், சமீபத்தில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை நேரில் சந்தித்தார். தனது கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் என, அனைவரையும், 2026 சட்டசபை தேர்தலை நோக்கி முன்னேற்றி வரும் விஜய், வரும் பிப்ரவரி 26-ந் தேதி தனது கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனையடுத்து மார்ச் முதல் வாரத்தில் இருந்து விஜய், தமிழகம் முழுவதும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது, இந்த ஒய் பிரிவு பாதுகாப்பில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் என மொத்தம் 8-11 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். அதேபோல் இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு, தமிழகத்திற்குள் மட்டுமே வழங்க்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.